குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகம் மேல் முறையீட்டை சமர்பித்துள்ளது.
முறையீட்டுக்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதை ஏஜி அலுவலகத்தில் வழக்கு விசாரணை, முறையீட்டுப் பீரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் இன்று உறுதிப்படுத்தினார்.
“அது சமர்பிக்கப்பட்டுள்ளது. சில காரணங்களும் உள்ளன,” என்று அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் முறையீட்டுக்கான காரணங்களை வெளியிடவில்லை.
அந்த விசாரணையை நடத்திய நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா எழுத்துப்பூர்வமாக வழங்கிய தீர்ப்பை எல்லாத் தரப்புக்களும் பெற்ற பின்னர் முறையீடு செய்து கொள்வதற்கு அரசு தரப்புக்கு நாளை வரை அவகாசம் இருந்தது.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து ஜனவரி 9ம் தேதி அன்வார் விடுவிக்கப்பட்டார்.
சைபுலின் சாட்சியம், மற்ற ஆதாரங்களுடன் ஒத்துப் போக முடியாதது உட்பட பல காரணங்கள் அடிப்படையில் அன்வாரை விடுவிப்பதாக நீதிபதி ஜபிடின் தெரிவித்தார்.