பினாங்கு முதலமைச்சரும் அவரது மனைவியும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா யோசனை

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் அவரது துணைவியார் பெட்டி சியூ ஜெக் செங்-கும் லிம்-மின் முன்னாள் ஊழியரான இங் பெய்க் கெங்-கும் தங்களைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு முடிவு கட்ட பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா தலைவர் ஒருவர் யோசனை கூறியிருக்கிறார்.

சர்ச்சை எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு அந்தச் சோதனையே சிறந்த வழியாக இருக்கும் என மஇகா சமூக, நலன் பிரிவின் துணைத் தலைவர் ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

“லிம்-முக்கும் இங்-கிற்கும் இடையில் எந்த ஊழலும் நிகழவில்லை என்பதை மக்களுக்கு நிரூபிப்பதற்கு அந்த மூவரும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது  அவர் சொன்னார்.

கடந்த வாரம் மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் இங்-கைத் தெரியுமா என்று டிஏபி கோத்தா லக்ஸ்மணா உறுப்பினருமான பெட்டி சியூவை நோக்கி டுயோங் சட்டமன்ற உறுப்பினர் கான் தியான் லூ கேள்வி எழுப்பிய பின்னர் லிம். பெட்டி சியூ, இங் சம்பந்தப்பட்ட சர்ச்சை வெடித்தது.

இங்-குடன் தமது கணவரான லிம்-முக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை கடந்த சனிக்கிழமையன்று நிருபர்கள் சந்திப்பின் போது பெட்டி சியூ மறுத்தார்.

இங் பினாங்கு முதலமைச்சர் அலுவலகத்தில் ஒர் ஊழியர் ஆவார்.

அந்த விவகாரம் மீது இங் ஏன் மௌனமாக இருக்கிறார் என்றும் ஏன் கருத்துக் கூறவில்லை என்றும் ரமணன் வினவினார்.

பெர்னாமா

 

TAGS: