மஇகாவை தொடர்ந்து தாக்கினால் முகத்தில் எசிட் தெளிக்கப்படுமென எச்சரிக்கை

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் எசிட் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று எஸ்எம்எஸ் செய்தி மூலம் மருட்டல் விடப்பட்டுள்ளது. தாம் மஇகாவை குறைகூறுவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

சுரேந்தரன் செய்துள்ள போலீஸ் புகாரின்படி, இழிவான சொற்களடங்கிய அச்செய்தியில் மஇகாவை குறைகூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையேல் அவருடைய முகத்தில் எசிட் தெளிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதாக சுரேந்தரன் கூறினார்.

இந்த மருட்டலுக்கு பின்னணியில் மஇகா இருப்பதாக அவர் போலீஸ் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். அவர்களுக்கு வன்செயல் வரலாறு உண்டு என்று அவர் மேலும் கூறினார்.

“இதனைச் செய்தவர் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். கிரிமினல் சட்டம் பிரிவு 506 மற்றும் 507 இன் கீழ் அவருக்கு ஒன்பது ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படலாம்”, என்று வழக்குரைஞரான சுரேந்தரன் கூறினார்.

சுரேந்திரனுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்த பிகேஆர் சட்டப் பிரிவு தலைவரான லத்தீபா கோயா போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அந்தச் செய்தி பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசியின் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது மிகச் சுலபமானது விசயம் என்றாரவர்.

TAGS: