நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து?
கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால் பயன் அற்றதாகா ஆகி விடும். வேலியில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதாரவாத்தான் சாட்சி சொல்லும்.
இந்தியர்களை பொருத்தமட்டில் நாம் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகம். இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் என்ற எண்ணத்தைக் கூட ஆணித்தரமாக நம்மால் இன்னமும் உணர முடியவில்லை. அதிகாரம் கொண்ட இனம் நம்மை பிரித்தாளுகிறது.
இந்நிலையில் நமது இந்திய அரசியல் தலைவர்களின் விவாதம், விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை என்ற கேள்வியோடு முடியக்கூடாது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் தலைவர்களாக ஆகப்போகிறவர்கள்தான் கொள்கை அளவில் விவாதம் செய்வார்கள். அந்த வகையில் நமது நாட்டின் சத்து மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் அடுத்த பிரதமராக ஆவதற்கு போட்டியிடும் எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமும் இந்தியர்களின் அடிப்படை பிரச்னைகளை எப்படித் தீர்பார்கள் என விவாதம் செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டும்.
நம்மைப் பற்றிய விவாதங்களில் மா.இ.காவின் சரவணனோ, பி.கே.ஆர் கட்சியின் சிவராசாவோ மாறுபட்ட கருத்தை விவாதிப்பதால் என்ன பயன்? இரண்டு பேருமே எதை சாதிக்க விரும்பினாலும் அவர்களின் கடிவாளத்தை பிடித்திருக்கும் மலாய்காரத் தலைவர்களின் ஒப்புதல் வேண்டும்.
அதைவிடுவோம் இந்தியர்களை பொருத்தமட்டில் அப்படி என்ன மாறுபட்ட கருத்து இருந்துவிடப் போகிறது? அப்படியே இவர்களின் விவாதங்கள் புனிதமானவைகளாக இருந்தாலும் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?
நலன், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?