பிகேஆர் தலைவர் ஒருவர் மலாய் இனத்தைச் சார்ந்தவரா என்பது மீதான சர்ச்சையின் அடிப்படையில் அவருடைய புதல்வருக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை மாரா என்ற Majlis Amanah Rakyat மீட்டுக் கொண்டுள்ளது.
அந்தத் தந்தையான பத்து பஹாட் பிகேஆர் தலைவர் சையட் ஹமிட் அலி அந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
சையட் ஹமிட் பிறந்த போது “அரபு” என பதிவு செய்யப்பட்டதால் அவருடைய புதல்வரான 17 வயது அக்மால் ஹாக்கிமுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வழங்கப்பட்ட கடன் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
“எனக்கு வயது 69. அதாவது மெர்தேக்காவுக்கு முன்னர் நான் பிறந்தேன். எனது அண்டை வீட்டுக்காரர் என் பிறப்பைப் பதிவு செய்தார். என் பெயர் சையட் என வருவதால் நான் அரபு என அவர் எண்ணியிருக்க வேண்டும்.”
“என் புதல்வருடைய பிறப்பை நானே பதிவு செய்தேன். நான் அவருடைய பிறப்புப் பத்திரத்தில் தந்தை மலாய்க்காரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என அவர் சொன்னார்.
சையட் ஹமிட் முன்னாள் பிகேஆர் தலைவர் சையட் ஹுசின் அலி-யின் சகோதரர் ஆவார். ஜுன் 23ம் தேதி கூரியர் அஞ்சல் வழி கல்விக் கடன் ரத்துச் செய்யப்படும் தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார்.
அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியை சையட் ஹமிட் தமது முகநூல் பக்கத்தில் சேர்த்துள்ளார். மாரா கல்விக் கடன்களை பெறுகின்றவர்கள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரும் மலாய்க்காரர்களாக அல்லது பூமிபுத்ராவாக இருக்க வேண்டும் என அந்தக் கடிதம் கூறுகிறது.
“ஆகவே வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திட்டம் நீங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால் ரத்துச் செய்யப்படுகின்றது,” என அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.