அண்மைய காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது ஒரு காரணமாக இருக்கக் கூடும் என பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு கருதுகிறது.
இவ்வாறு என்கேஆர்ஏ என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குற்றச் செயல்களை குறைப்பதற்கான பிரிவுக்கு இயக்குநராக பணியாற்றும் யூஜின் தே கூறுகிறார்.
அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுவது மீது அந்த பிரிவு ஆய்வு நடத்துவதாகவும் அவர் சொன்னார்.
“அந்த அம்சம் முக்கியமான பங்காற்றுகிறது அல்லது வெறும் துணை அம்சமா என்பதை நாங்கள் ஆராய்கிறோம்,” என அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த விளக்கமளிப்பின் போது கூறினார்.
அண்மைய குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டவர்கள் அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களா என்பதை அறிந்து கொள்ள போலீசார் அண்மைய குற்றச் செயல்களையும் ஆய்வு செய்கின்றனர் என்றும் யூஜின் தே குறிப்பிட்டார்.