பெர்சே 2.0 பேரணியை நேரில் கண்டவர்கள் அளித்த தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது. அப்பேரணி குறித்து பாரிசான் கட்டுப்பாட்டிலுள்ள ஆதிக்க ஊடகங்கள் வெளியிட்ட எதிர்மறையான செய்திகளை மறுதலிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது.
210 பக்கங்கள் கொண்ட “Kisah Sebenar 9 July 2011” (What Really Happened on 9 July 2011) என்ற அந்நூல் இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் வலைப்பதிவர் நாதானியல் டானும் அவரது தன்னார்வல நண்பர்களுமாவர்.
பெர்சே பேரணி நடந்த இரு மாதங்களுக்குப் பிறகு வெளியீடு காணும் இந்நூலில் தூய மற்றும் நேர்மையான தேர்தல் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோலாலம்பூர் தெருக்களில் 50,000 மக்கள் திரண்ட அந்த வரலாற்றுப்பூர்வமான பேரணி பற்றிய 40 கட்டுரைகளும் 97 புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
அப்பேரணி பற்றி ஆதிக்க ஊடகங்கள் வழங்கிய செய்திகளுக்கும் நேரில் கண்டவர்கள் அளித்தத் தகவல்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் இந்நூலைத் தயாரிக்க தூண்டியதாக டான் கூறினார்.
இந்நூலுக்கு எழுதியுள்ள முகவுரையில் பெர்சே 2.0 பேரணியில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை 50,000 என்று தகவல் அளிக்கப்பட்ட வேளையில் ஆதிக்க ஊடகங்கள் 6,000 பேர்தான் கலந்து கொண்டனர் என்று செய்தி வெளியிட்டிருந்தது குறித்து தமது அதிருப்தியை டான் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது கண்ணீர் புகைக்குண்டு வெடித்தது, பீரங்கி மூலம் நீர் பாய்ச்சியது மற்றும் போலீசார் பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கியது போன்றவற்றை வீடியோக்களும் படங்களும் காட்டினபோதிலும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற பிரதமர் நஜிப்பின் கூற்று என்றார் டான்.
பெர்சே 2.0 தலைவர் அம்பிகா சீனிவாசனும் வழிகாட்டல் குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட்டும் இந்நூல் வெளியீடு நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்நிகழ்வில் பேசிய பாக் சாமாட் அரசாங்கம் பெர்சேயின் எட்டு கோரிக்கைகளையும் அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்த வேண்டும், இல்லையேல் அத்தேர்தல் அர்த்தமற்றதாகும் என்றார்.
அடுத்து பேசிய அம்பிகா தூய மற்றும் நியாயமான தேர்தல்கள் எதனைப் பிரதிநிதிக்கின்றன என்பது பற்றி தம்முடையக் கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் பேரணி பற்றிய தமது சொந்த அனுபவம் பற்றியும் ஒரு நூல் எழுத எண்ணியிருப்பதாகக் கூறினார்.
பேரணிக்கு முன்பாக மலேசிய சோசலிசக் கட்சியின் அறுவர் கைது செய்யப்பட்ட EO6 சம்பவத்தை நினைவுகூர்ந்த அம்பிகா, பெர்சேயிக்கு எதிரான சீற்றத்தை அவர்கள் பெர்சேயின் சார்பில் தாங்கிக் கொண்டனர் என்றார்.
ஆகவே, அவர்களைத் தடுத்து வைக்க உத்தரவிட்டவர் யார் மற்றும் அந்த உத்தரவுக்கான நியாயம் என்ன என்பது இன்று வரையில் தெரிவிக்கப்படாமல் இருப்பதால், இவ்வழக்கு மீது மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.
பேரணிக்குப் பின்னர் பெர்சேயின் பங்கு குறைந்து விட்டது போன்றும் தேவாலயத்தில் திடீர் சோதனை போன்ற சர்ச்சைகளும் நஜிப்பின் இசா சட்டம் அகற்றப்படும் என்ற அறிவிப்பு போன்ற ஊடகச் செய்திகளாலும் பெர்சே பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தாம் உணர்வதாக ஒரு 19 வயது இளைஞர் குறைபட்டுக் கொண்டார்.
பெர்சே 2.0 அடங்கி விட்டது என்பதை மறுத்த அம்பிகா, போராட்டம் இப்போது மக்கள் கையில் இருக்கிறது. பெர்சேயின் போராட்டம் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கிறது என்றாரவர்.