பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என செல்வாக்குமிக்க அனைத்துலக சஞ்சிகையான தி எகானாமிஸ்ட் கூறுகிறது.
அந்த சஞ்சிகையின் இந்த வாரத்திற்கான ஆசிய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்சே-யை சிறுமைப்படுத்தும் அம்னோ முயற்சிகள், பல இன அரசியலுக்கு ஆதரவான போராட்டக்காரர் எனத் தம்மை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகளை வேரறுக்கக் கூடும்.
அம்பிகாவுக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்களை நஜிப் இது வரையில் கண்டிக்கவில்லை என்பதை அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது. ஆனால் அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்பிய ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸை அவர் லேசாக கண்டித்தது மட்டுமே அவர் செய்த ஒரே காரியமாகும்.
“தேசியவாதத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் அம்னோவின் ‘ஜமீன்தார்கள்’ நெருக்குதலுக்கு இலக்காகும் போது இன அரசியலை தூண்டி விடுகின்றனர்.”
“வேலைகளிலும் கல்வியிலும் அரசமைப்பு ரீதியில் மலாய்க்காரர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு சீனர்களும் இந்தியர்களும் மருட்டலாக விளங்குவதாக கூறிக் கொண்டு அந்த ‘ஜமீன்தார்கள்’ மலாய் வாக்காளர்களுடைய உணர்வுகளை உசுப்பி விடுகின்றனர்.”
“நஜிப்-பின் கீழ் நல்லது நடக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் வலுவான நிலையைக் கடைப்பிடிக்க தவறி விட்டதாக நஜிப் மீது அம்பிகா குற்றம் சாட்டுகிறார்.
“முகமட் சொன்னதை நிராகரித்த நஜிப் மற்ற இனங்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடிய எதனையும் சொல்ல வேண்டாம் என எம்பி-க்களை கேட்டுக் கொண்டார்,” என அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டது.
அண்மைய காலமாக கூட்டரசு அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் அம்பிகாவைக் குறி வைத்து நடத்தி வரும் பல வகையான தாக்குதல்களை பட்டியலிட்ட அந்த சஞ்சிகை முகமட்-டின் கூற்று அவற்றில் ஒன்று எனத் தெரிவித்தது.
தேசத் துரோகத்திற்காக அம்பிகாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜுன் 26ம் தேதி நாடாளுமன்றத்தில் முகமட் கேட்டுக் கொண்டார்.
அவர் தமது கூற்றை அரை மனதுடன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்டுக் கொண்டார்.
இந்தியர் வாக்குகள் பாதிக்கப்படுமா ?
அம்பிகா வீட்டுக்கு முன்னால் மலாய் பேர்கர் வியாபாரிகள் மாட்டிறைச்சி பேர்கர் கடைகளை அமைத்ததும் மற்ற நிகழ்வுகளில் அடங்கும் என தி எகானாமிஸ்ட் சஞ்சிகை கூறியது.
“அது மடத்தனமாக இருந்தாலும் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்ட ஒர் இந்துவான அம்பிகாவை அது புண்படுத்தக்கூடிய விஷயமாகும்.”
“அதனை விட மடத்தனமானது, முன்னாள் இராணுவ வீரர்கள் குழு ஒன்று அவரது வீட்டுக்கு முன்னால் ஊர்வலமாகச் சென்று தங்கள் குதத்தை ஆட்டிக் காண்பித்ததாகும். அவர்கள் அம்பிகாவை கீழறுப்புவாதி எனவும் அழைத்தனர்,” என அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
அம்பிகாவுக்கு எதிரான தாக்குதல்கள் இனவாதத் தன்மையைக் கொண்டவை என அந்த சஞ்சிகை தெரிவித்தது.
“மலாய் ஆண்கள் தமக்கு எதிராக நடத்தும் தாக்குதல்கள் அனைத்தும் இனவாதத் தன்மையைக் கொண்டவை என அம்பிகா நம்புகிறார்.”
“பெர்சே இணைத் தலைவராக தம்முடன் இருக்கும் பிரபலமான எழுத்தாளரான ஏ சாமாட் சைட் குறி வைக்கப்படவே இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்,” என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பிகா எதிர்நோக்கும் நெருக்குதல்களை இந்திய சமூகம் எதிர்மறையாக எடுத்துக் கொண்டது எனக் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை அதனால் பிஎன் -னுக்கான இந்தியர் வாக்குகள் பாதிக்கப்படும் என கருத்துத் தெரிவித்தது.
“2008ம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் இந்தியர் வாக்குகள் பிஎன் -னுக்கு எதிராக விழுந்த பின்னர் இந்தியர்களைக் கவருவதற்கு நஜிப் அரும்பாடுபட்டுள்ளார். அந்த முயற்சிகள் இப்போது பலனளிக்காமல் போகக் கூடும்,” என்றும் அந்தக் கட்டுரை கருதுகிறது.