சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமாருடன் தாம் கூட்டாக இறால் வளர்ப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுவதை Pristine Agrofood Sdn Bhd இயக்குநர் சூ பாக் தெக் மறுத்துள்ளார்.
தஞ்சோங் காராங்கில் உள்ள 100 ஏக்கர் பரப்புள்ள இறால் பண்ணையில் ஒரு பகுதி நிலத்துக்கு மட்டுமே நோ சொந்தக்காரர் என நேற்றிரவு தொடர்பு கொள்ளப்பட்ட போது சூ கூறினார்.
செக்கிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லி-முக்கும் தஞ்சோங் காராங் எம்பி-யும் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சருமான நோ ஒமாருக்கும் இடையிலான அரசியல் சர்ச்சையில் தமது நிறுவனம் சிக்கிக் கொண்டுள்ளது தமது அதிர்ச்சியை அளித்துள்ளதாக சூ மலேசியாகினியிடம் சொன்னார்.
“மாநிலச் சட்டமன்றத்தில் இங் ஏன் அந்த விஷயங்களை எழுப்ப வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர் ஏன் அதனைச் செய்தார் ? இது கிறுக்குத்தனமானது,” என்றார் அவர்.
நோ-வுடன் தமது நிறுவனம் கொண்டுள்ளது வழக்கமான வர்த்தக உறவாகும், தாம் சாதாரண வணிகரே என்றும் அரசியல் பின்னணி ஏதும் இல்லை என்றும் சூ சொன்னார்.
அவர்களுடைய அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதை நான் விரும்பவில்லை,” என்றார் அவர்.
ஒரு ஏக்கருக்கு 840 ரிங்கிட் வாடகை என்ற விகிதத்தில் 10 ஆண்டு காலக் குத்தகைக்கு நோ-வுடன் உடன்பாட்டில் தமது நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாக சூ தெரிவித்தார். அதுவும் நோ, எம்பி-யாவதற்கு வெகு நாளைக்கு முன்பே நோ அந்த நிலத்தை பெற்றிருந்தார்.
“நாங்கள் அவருக்கு அவருக்கு வாடகை மட்டுமே கொடுக்கிறோம். வேறு ஒன்றுமில்லை. அவர் நிலச் சொந்தக்காரர். அவர் வியாபாரத்தில் சம்பந்தப்படவே இல்லை.”
ஏற்கனவே அந்த நிலத்தில் இன்னொரு நிறுவனம் இறால் வளர்ப்புத் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. சூ கடந்த ஆண்டு அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார்.
“நோ நில உரிமையாளர். அந்தப் பண்ணையை இன்னொரு நிறுவனத்துக்கு அவர் விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? அவர் அதனைச் செய்ய அனுமதிக்கப்படவில்லையா ?”
“அவர் அந்த நிலத்தில் சிறிய பகுதியை வைத்துள்ளார். அது 20 முதல் 30 ஏக்கர் வரை இருக்கும். அவர் அமைச்சரான பின்னர் அவருக்கு அந்த நிலம் கிடைக்கவில்லை,” என சூ குறிப்பிட்டார்.
‘அமைச்சுக்குத் தொடர்பு இல்லை’
அந்தப் பண்ணைக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
என்றாலும் உணவுக்காக நிதி (3F) திட்டத்தின் கீழ் நிறுவனத்துக்கு Agro Bank வங்கியிடமிருந்து கடன் கிடைத்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
நோ தலைமையில் இயங்கும் விவசாய விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சு நடத்தும் வங்கி Agro Bank ஆகும்.
கடந்த ஆண்டு தொடக்கம் நோ Pristine Agrofood நிறுவனத்துடன் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக நேற்று இங் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார். அது அவருடைய அமைச்சர் பதவிக்கு முரணானதாகும் என்றார் இங்.
அந்த நிலத்தை 1995ம் ஆண்டு நோ பெற்றதை இங் வழங்கிய ஆவணங்கள் காட்டின.
அந்த விவகாரம் மீது நோ-வுடன் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.