லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,நேற்றிரவு ஒரு நிகழ்வில் தெரித்த ஒரு தகவல் அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அண்மையில் அவர், 2008 மார்ச் 8-இல் தம் தேர்தல் அதிகாரியாக் (ஆர்ஓ) இருந்தவரைச் சந்தித்தார். அப்போது அவர் தாம் மீண்டும் தேர்தல் அதிகாரியாக பணியாற்ற நேர்ந்தால் நுருல் வெற்றி பெற மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
பணி ஓய்வுபெறும் கோலாலம்பூர் மேயர் அஹ்மட் புவாட் இஸ்மாயிலுடன் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச எம்பிகள் சேர்ந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்துக்குப் பின்னர் அந்த அதிகாரியைச் சந்திக்க நேர்ந்ததாக நுருல் இஸ்ஸா(இடம்)கூறினார்.
அப்போது நிகழ்ந்ததை நேற்று நடைபெற்ற லெம்பா பந்தாய் பிகேஆர் நிதிதிரட்டு விருந்தில் நுருல் விவரித்தார். அந்த அதிகாரியிடம் லெம்பா பந்தாய் தொகுதியில் மீண்டும் ஆர்ஓ-வாக இருப்பாரா என்று நுருல் கேட்டிருக்கிறார்.
“அதற்கு 2008-இல் ஆர்ஓ-வாகப் பணியாற்றிய அவரின் பதில், ‘இல்லை, மீண்டும் ஆர்ஓ-வானால் நீங்கள் வெற்றிபெற முடியாது’ என்றார்”.கோலாலம்பூர் தியான் ஹிவா ஆலயத்தில் நடைபெற்ற விருந்தில் அவர் இதைக் கூறியதும் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏதோ வேடிக்கையாகத்தான் சொல்கிறார் என்று பார்த்தால்,கடுமையான பார்வை ஒன்றுதான் பதிலாகக் கிடைத்தது.
“எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?பெர்சேயின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக இசி கூறிக்கொள்கிறது.
“ஆனால் ஒரு தேர்தல் அதிகாரியைச் சந்தித்தபோது ‘மீண்டும் லெம்பா பந்தாயில் பணியாற்றினால் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் என்று’ என்கிறார்”.
அவருக்குப் பின் உரையாற்ற வந்த பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ,விருந்துக்கு வந்திருந்த ஆயிரம்பேரைக் காண்பித்து நுருல் இஸ்ஸா எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.
“அவர் எதை நினைத்து கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை.அடுத்த தேர்தலில் அவர் லெம்பா பந்தாயைத் தக்க வைத்துக்கொள்வார் என்பதில் ஐயமில்லை”, என்றார்.
பிறகு அந்த வழக்குரைஞர், பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி பக்கமாக திரும்பி,“உங்களுக்காக வருந்துகிறேன். நீங்கள் உள்ளே (சிறை) போகப்போவது உறுதி.
“அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.அவர்கள் வருவார்கள்.கைது செய்வார்கள்.போலீஸ் நிலையத்தில் வைத்து அடிப்பார்கள் உதைப்பார்கள்.ஆனால் கவலை வேண்டாம்.வழக்குரைஞர் குழு தயாராகவுள்ளது”, என்று கோபிந்த் கூறினார்.
நுருல் இஸ்ஸா பேசிக் கொண்டிருந்தபோதுதான் ரபிஸி வந்தார். அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.உடனே நுருல், ரபிஸிடம் கை குலுக்க நினைப்பவர்கள் இப்போதே கைகுலுக்கிக் கொள்ளுங்கள், பல்வேறு விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ள அவர் விரைவில் சிறை செல்ல நேரலாம் என்றார்.
“தயவு செய்து அவருடன் கை குலுக்குங்கள். நலம் விசாரியுங்கள். நாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் அவர் எவ்வளவு காலம் சிறையில் இருப்பார் என்று தெரியாது”, என்றார்.
எல்ஆர்டி அம்பாங் தொடர்பில் அவர் அம்பலப்படுத்திய ஆவணங்கள் இரகசிய முத்திரை குத்தப்பட்டவை என்று கூறிய நுருல், என்எப்சி ஊழலை வெளிப்படுத்தியதற்காக வங்கி, நிதிநிறுவனச் சட்டத்தின்கீழ் அவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நேற்றைய இரவு விருந்துக்கு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் வந்திருந்தார்.வந்தவர், மலேசிய எல்விஸ் பிரஸ்லியான எச்.டி.லோங் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வில், ரோக் அண்ட் ரோல் மன்னர் எல்விஸ் பாடிய It’s now or never பாடலைப் பாடிக் கலகலப்பை உண்டுபண்ணினார்.
பாடலின் கடைசிப் பகுதியை மட்டும் சற்று மாற்றிப் பாடினார். “It’s now or never, we vote PR (Pakatan Rakyat). We save Malaysia, from Umno-BN. Tomorrow will be too late. It’s now or over, my love won’t wait,” என்று அன்வார் பாட கூட்டத்தினர் உற்சாக மிகுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நேற்றைய நிகழ்வில் ரபிஸி, முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் முதலானோரும் பேசினார்கள்.