வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதை அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரைக்கு பாஸ் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
“அஞ்சல் வாக்குகளில் பல தகிடுதத்தங்கள், மோசடிகள் நிகழலாம் என்பதால் இசி-இன் பரிந்துரை பொருத்தமற்றது என்பது பாஸ் இளைஞர்களின் கருத்து.
“வெளிநாட்டில் உள்ள குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.ஆனால்,அவர்களை அஞ்சல் வாக்காளர்களாக ஆக்க வேண்டாம்”, என்று பாஸ் இளைஞர் உதவித் தலைவர் ராஜா அஹமட் இஸ்கண்டர் ராஜா யாக்கூப் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
அஞ்சல் வாக்குகளில் மோசடி நிகழ்ந்துள்ளதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு என்றும் குறிப்பிட்ட வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக அதில் தகிடுதத்தங்கள் செய்வது எளிது என்றும் அவர் சொன்னார்.
“இதுபோன்ற தகிடுதத்தம் நாட்டில் இராணுவ முகாம்களில் நடைபெறுகிறது என்கிறபோது வெளிநாடுகளிலிருந்து வரும் அஞ்சல்வாக்குகளில் மோசடி நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?”, என்றவர் வினவினார்.
கடந்த ஆண்டு பாஸ், முன்னாள் இராணுவ எழுத்தர் ஒருவரை அழைத்து வந்தது.அவர்,1986-இல் தமக்கும் சக ஊழியர் ஒருவர் ஒருவருக்கும் இராணுவத்தினரின் அஞ்சல் வாக்குகளை நிரப்புப்படி உத்தரவிடப்பட்டிருந்ததாகக் கூறினார்.
தூதரங்களில் வாக்களிக்கலாம்
மலேசிய தூதரகங்களையே வாக்களிக்கும் மையங்களாகவும் வாக்கு எண்ணும் மையங்களாகவும் ஆக்கலாம் என்று ராஜா அஹமட் மாற்று யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.
“அதன்வழி இசி அதிகாரிகளும் கட்சிப் பேராளர்களும் வாக்களிப்பையும் வாக்கு எண்ணப்படுவதையும் நேரில் கண்காணிக்க வசதியாக இருக்கும்.
“தேர்தல் முடிவுகளையும் வெளிப்படையானவை என்று நம்பிக்கையுடன் ஏற்க முடியும்”, என்றாரவர்.
இசி, வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்கள் அஞ்சல் வாக்காளர்களாக தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் புதன்கிழமை அறிவித்திருந்தது.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிப்பது என்ற முடிவு வரவேற்கப்பட்டிருந்தாலும் விமர்சகர்கள், அஞ்சல்வழி வாக்களிப்பில் மோசடிகள் நிகழும் சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.