மசீச-தலாம் தொடர்புகளை அம்பலப்படுத்தப் போவதாக ராபிஸி மருட்டுகிறார்

மசீச துணை அமைச்சர் சுவா தீ யோங் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தைத் தாக்கிக் கொண்டிருந்தால் தலாம் கார்ப்பரேஷன் -உடன் அந்த பிஎன் கட்சிக்கு உள்ள தொடர்புகள் சம்பந்தப்பட்ட “கோப்புக்களை அம்பலப்படுத்தப் போவதாக” பிகேஆர் வியூக இயக்குநர் ராபிசி இஸ்மாயில் மருட்டியுள்ளார்.

“தலாம் மசீச-வுடன் தொடர்பு உடையது. தலாமும் மசீச தலைவர்களும் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புக்கள் எங்களிடம் உள்ளன. அவர் அதனைத் தொடர்ந்தால் தலாமிலிருந்து உண்மையில் யார் நன்மை அடைந்தார்கள் என்பதைக் காட்டுவதற்கு நான் அடுத்த வாரம் பத்திரிக்கையாளர்களை மீண்டும் சந்திப்பேன்,” என்றார் ராபிஸி.

உண்மையில் சிலாங்கூர் மந்திரி புசார் அந்தக் கோப்புக்களை “தோண்ட வேண்டும். ஆனால் தாம் ஒவ்வொரு கோப்பையும் ஆய்வு செய்து தலாம் வழி நன்மை அடைந்த ஒவ்வொரு மசீச தலைவரையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன் என அவர் தொடர்ந்து கூறினார்.

சிலாங்கூர் மீது சேற்றை வாரி இறைக்கும் போது சுவா புள்ளிவிவரங்களை ஒழுங்காக சேர்க்கவில்லை. பிஎன் ஆட்சியின் போது மாநில அரசாங்கத்தின் செலவில் தலாம் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் சம்பாதித்ததை சுவா மறந்து விட்டார்.

சுவா அதனைப் புறக்கணிக்க முடிவு செய்தாலும் சிலாங்கூர் ஆட்சி மன்றத்தில் மசீச தலைவர்கள் இருந்த போது 4,259 ஏக்கர் தலாமுக்கு எதுவும் ஈடாகப் பெறாமல் கொடுக்கப்பட்டது.

அந்த நிலத்தை தலாம் பெற்றதோடு மட்டுமல்ல. அதற்கான பிரிமியம் தொகையையும் செலுத்தவில்லை.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்த போது புக்கிட் பெருந்தோங்கில் உள்ள இரண்டு துண்டு நிலத்துக்கு மட்டும் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரியை தலாம் சிலாங்கூர் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியிருந்தது.

தலாம் மாநில அரசுடன் பல கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டது. அவற்றில் பல கை விடப்பட்டன. அதனால் அந்த நிறுவனம் பல மாநில அரசு துணை அமைப்புக்கலுக்கு கிட்டத்தட்ட 392 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டியிருந்தது.

மாநில நிலங்களைக் கூட தலாம் வங்கிகளிடம் அடமானம் வைத்திருந்தது. அந்த அடமானக் கடன்கள் தீர்க்கப்பட்ட போது அந்தக் கடன் அளவு 292 மில்லியன் ரிங்கிட்டை எட்டியிருந்தது.

“நாங்கள் அதிகாரத்துக்கு வந்த போது இவ்வளவு குழப்பம் இருந்தது. எங்களுக்கு எல்லாம் சிரமமாக இருந்தது.”

“அந்த நிலங்களை பறிமுதல் செய்வதற்கு எங்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. ஆனால் மசீச-வில் இருந்த சுவா-வின் நண்பர்கள் அவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து விட்டனர். நிலத்தை எடுத்துக் கொள்வதாக நாங்கள் வங்கிகளிடம் சொல்ல முடியாது,” என்றார் ராபிஸி.

“கடன் தீர்வு நடவடிக்கையின் கீழ் மாநில அரசுக்கு தலாமிடமிருந்து 684 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலம்  கிடைத்தது. அதில் 292 மில்லியன் ரிங்கிட் தலாம் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டது.”

“அது பெரிய வரைபடம். நான் சின்னச் சின்ன விஷயங்களுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை. அவர் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு பிரச்னைக்கான முக்கியக் காரணத்தையே அலட்சியம் செய்கிறார்.”

“நான் இந்த உலகம் முடியும் வரையில் என் கணக்கில் உறுதியாக இருப்பேன். நான் சுவா-வைப் போன்று என் எண்களை மாற்ற மாட்டேன்,” என ராபிஸி மேலும் கூறினார்.\

சிலாங்கூர் அரசாங்கமும் தலாமும் சந்தேகத்துக்குரிய ஒரு பில்லியன் ரிங்கிட் பேரத்தைச் செய்து கொண்டிருப்பதாக சுவா கூறியிருந்தார்.

கடன்களை ஈடு செய்யும் போது சிலாங்கூர் சில நிலங்களுக்கு “அதிகமாக” கொடுத்து விட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

அந்த விவகாரம் தொடர்பில் மசீச மீது வழக்குப் போடப் போவதாக சிலாங்கூர் கூறியுள்ள வேளையில் புர்சா மலேசியாவுக்குத் தான் தெரிவித்த தகவல்களை சுவா புறக்கணித்து விட்டதாக தலாம் குற்றம் சாட்டியது.

அதனால் சுவா உண்மை நிலையை அறியவில்லை என்றும் அது குறிப்பிட்டது.