பினாங்கில் மலைகள் மடிவதற்கு நடப்பு நிர்வாகமே காரணம் என பிஎன் குற்றம் சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் இப்போது விநியோகம் செய்யப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டை மாநில அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மாநிலத்தின் மலைச்சாரல் மேம்பாடு பற்றிய அந்த பிரசுரங்களில் பொய்கள் நிறைந்துள்ளதாக மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ் கோன் இயாவ் சாடினார்.
அந்தப் பிரசுரத்தில் காணப்படும் ஐந்து திட்டங்களும் 2008ம் ஆண்டுக்கு முன்னர் முந்திய பிஎன் அரசினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை சாவ் சுட்டிக் காட்டினார்.
அந்த ஐந்து திட்டங்களும் கடல் மட்டத்திலிருந்து 250 அடி உயரத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு நடப்பு அரசாங்கம் காரணம் எனக் கூறும் பிஎன் -னுக்கு ‘வெட்கமே இல்லை’ என்றார் அவர்.
“இப்போது அது மலைகளைக் காப்பாற்றுங்கள்’ எனக் கூச்சல் போடுகின்றது. உண்மையில் அந்தத் திட்டங்கள் மலைகளைக் கொன்று விட்டன. அவை கண்ணீர் சிந்துகின்றன. பிஎன் நிர்வாகத்தில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டவை,” என சாவ் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் எங்கள் மலைகளைக் காப்பாற்ற விரும்புகிறோம்” என்னும் தலைப்பைக் கொண்ட ஒரு பக்கத் துண்டுப் பிரசுரம் பற்றி சாவ் அவ்வாறு குறிப்பிட்டார். அதில் இரண்டு படங்கள் இடம் பெற்றுள்ளன.