கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தமது எதிர்வாதத்தில் சாட்சியமளித்தார். அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவும் கூட்டுப் பொறுப்பு என்று அவர் தமது சாட்சியத்தில் கூறினார்.
பிரதிவாதித் தரப்பின் முதல் சாட்சியாக அவர் இன்று சாட்சியமளித்தார்.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை ஏற்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், குறிப்பிட்ட முடிவை ஏற்றுக் கொள்கின்றீர்களா இல்லையா என மேசைச் சுற்றிலும் இருக்கும் அமைச்சர்களை கேட்பார் என லிங் சொன்னார்.
“அமைச்சரவை முடிவு கூட்டுப் பொறுப்பாகும். அந்த முடிவை அங்கீகரிக்காத எந்த அமைச்சரும் பதவி துறக்கலாம் என்றும் கூட மகாதீர் சொல்வார்.”
லிங் நீண்ட காலத்துக்கு போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
வழக்குரைஞர் வோங் கியான் கியோங் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சில சமயங்களில் அமைச்சரவை முடிவுகள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மகாதீர் அமைச்சரவையை எப்படி வழி நடத்தினார் என்ற விவரத்தை முன்னாள் மசீச தலைவருமான லிங் வெளியிட்டார்.
அவர் 1986ம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டு வரையில் மசீச தலைவராக இருந்த போது லிங் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.
தமது அமைச்சில் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு முந்திய கூட்டங்கள் நிகழும் என்றும் அவர் சொன்னார். அப்போது போக்குவரத்துக் கொள்கைகளை வகுக்குமாறு முதுநிலை அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும்.