– வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 14, 2012.
ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி லண்டனிலிருந்தது நாடு திரும்புகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஜூலை 29 ஆம் தேதி சிங்கபூர் வந்தடைந்து அங்கிருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி மலேசிய எல்லைக்குள் பிரவேசிக்க இருக்கிறார்.
கடந்த நான்கு வாரங்களில் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களின் போது, மலேசிய அரசு தம்மீது சுமத்தவிருக்கும் எத்தகைய கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் இருப்பதாக வேதமூர்த்தி கூறியுள்ளார்.
மலேசியாவில் கிரிமினல் குற்றத்திற்காக வேதமூர்த்தி தேடப்படுவதாக மலேசிய அரசு தங்களிடம் அறிவித்துள்ளதை 23 செப்டம்பர் 2008 தேதியிடப்பட்டு வேதமூர்த்தியின் வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்ட இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்புத்துறையின் கடிதம் அதனை உறுதி படுத்தியுள்ளது. இருப்பினும் இது நாள் வரை வேதமூர்த்தியை கைது செய்து மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எத்தகைய நடவடிக்கையையும் மலேசிய அரசு முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வரலாற்றுபூர்வமான சிவில் வழக்கை இங்கிலாந்து அரசுக்கு எதிராக பதிவு செய்து, அந்த வழக்கை தொடர்ந்தது நடத்துவதற்கு ஆற்றல் மிக்க வழக்கறிஞர் குழுவையும் நியமித்து விட்டதால், லண்டனுக்கு சென்ற தமது நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் தாம் தொடர்ந்தது அங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வேதமூர்த்தி கருதுகிறார்.
மலேசிய பேரரசருக்கு எதிராகவோ அல்லது மலேசிய திருநாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனோ ஹிண்ட்ராப் ஒரு போதும் எண்ணியதுமில்லை, செயல்பட்டதுமில்லை. அதைப்போலவே மலாய் முஸ்லிம் சகோதரர்களையோ, இதர இனங்களையும், சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராகவோ ஹிண்ட்ராப் அமைப்பின் செயல்பாடுகள் எந்த சூழலிலும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை.
2 மில்லியன் இந்திய வம்சாவளியினரின் தாயகம் மலேசியா. பிறந்த மண்ணில், சொந்தத் தாயகத்தில் அடிப்படை உரிமைகளுக்கு கையேந்தும் அவலத்தில் அவர்கள் இருப்பது இனியும் நீடிக்கக்கூடாது என்பததுதான் ஹிண்ட்ராப் அமைப்பின் நோக்கம். இதன் அடிப்படையிலேயே வேதமூர்த்தி செயல்பட்டார், செயல்படுகிறார், செயல்படுவார்.
இத்தகையச் சூழலில் வேதமூர்த்தி பிறந்த மண்ணில் தேடப்படும் ஒரு கிரிமினல் என்று குற்றம் சாட்டப்படும் அளவுக்கு புரிந்த குற்றம்தான் என்ன என்பதையும், அவர் எந்த குற்ற பிரிவில் பழி சுமத்தப் பட்டிருக்கிறார் என்பதையும் மலேசிய அரசு பகிரங்கபடுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் கோரிக்கை வைக்கிறது.
ஹிண்ட்ராபின் தர்மப் போராட்டத்தின் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்கவே வேதமூர்த்தி நாடு திரும்புகிறார். அந்த முயற்சியில் தமக்கு எதிராக, அநியாயமாகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை தம் தொப்புள்கொடி அறுபட்ட நாட்டிலேயே தீரத்துடனும், விவேகத்துடனும் சந்திக்க அவர் தயாராகிவிட்டார்.
வேதமூர்த்தி எங்கும் ஓடி ஒளிந்துக்கொள்ளப் போவதில்லை. எனவே, அனைத்துலக கடப்பிதழை அவரிடம் மீண்டும் வழங்குவதே மலேசிய அரசு அவரை எதிர்கொள்வதற்கான நியாமான செயலாகும்.