விவசாய அமைச்சர் நோ ஒமார், தஞ்சோங் காராங் இறால் பண்ணையில் தமக்குப் பங்கிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் தப்பில்லை என்றும் அவர் சொல்கிறார்.
விவசாய அமைச்சராகும் முன்பே, பாகான் தெங்கோராக்கில் 30-ஏக்கர் நிலம் தமக்குச் சொந்தமாக இருந்தது என்றவர் கூறியதாக சின் சியு டெய்லி கூறியுள்ளது.
“மேலும், அது எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.மற்றவர்களோடு சேர்ந்து அதில் இறால் வளர்ப்பு செய்கிறேன்.அது கூடாதா?”, என்றவர் நேற்று விவசாயப் பொருளகத்தின் நிகழ்வு ஒன்றைத் தொடக்கிவைத்தபின்னர் செய்தியாளர்களிடம் வினவினார்.
“ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், இத்தொழிலை மற்றவர்களுடன் சேர்ந்து செய்து வருகிறேன்.அமைச்சராவதற்கு முன்பே இத்தொழிலைச் செய்யத் தொடங்கி விட்டேன்.விவசாய அமைச்சுக்கு வந்த பின்னர் தொடங்கிய தொழில் அல்ல இது.அப்படியிருக்க, இதில் என்ன தவறு?”
தாம் சிலாங்கூர் மந்திரி புசார் ஆகிவிட்டால் மேலும் பல நிலங்கள் பிஎன் அரசியல்வாதிகளுக்குக் கைமாறும் என்பதை எண்ணிக் கவலையுறுவதாக செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் கூறியிருப்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது என்றும் நோ(இடம்) கூறினார்.
“நான் இன்னும் எம்பிகூட ஆகவில்லை.அதற்குள் கவலைப்படத் தொடங்கிவிட்டார். எம்பி ஆவதில் எல்லாம் நான் ஆர்வம் கொண்டிருக்கவில்லை”.
விவசாய அமைச்சரான அவர் இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பது முறைதானா என்று வினவியதற்கு, “அப்படியானால் வீடமைப்பு அமைச்சர் வீடு வாங்கக்கூடாது.அது அவர் வகிக்கும் பதவிக்கு முரணானதா?”, என்று எதிர்க்கேள்வி போட்டார்.
இறால் வளர்ப்பில் ஈடுபட பண்ணைத்தொழிலில் தமக்குள்ள ஆர்வம்தான் காரணம் என்றவர் சொன்னார்.
கூட்டுத்தொழில் என்பதற்கு மறுப்பு
இதனிடையே, பிரிஸ்டின் அக்ரோபூட் சென்.பெர்ஹாட் இயக்குனர் சூ பாக் டெக், நோவுடன் சேர்ந்து இறால் வளர்ப்பு செய்துவருவதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
இதற்குமுன்னர் மலேசியாகினியிடம் பேசிய சூ,தஞ்சோங் காராங்கில் இறால் வளர்ப்புப் பண்ணை அமைந்துள்ள 100-ஏக்கர் நிலம் அமைச்சருக்குச் சொந்தமானது என்றும் தம் நிறுவனம் அதைக் குத்தகைக்கு எடுத்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
பண்ணை கூட்டரசு அரசாங்கத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியது.ஆனால், அக்ரோ-பேங்கின் உணவுக்கான நிதித் திட்டத்திலிருந்து கடன் பெற்றுள்ளதை அது ஒப்புக்கொண்டது.
அக்ரோபேங்க் விவசாயம், விவசாயம் சார்ந்த அமைச்சின்கீழ் செயல்படும் வங்கியாகும்.அமைச்சுக்குப் பொறுப்பாக இருப்பவர் நோ.
நோ, தாம் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு முரணான வகையில் பிரிஸ்டின் அக்ரோபூட்டுடன் சேர்ந்து இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இங், கடந்த புதன்கிழமை சிலாங்கூர் சட்டமன்றத்தில் கூறியிருந்தார்.
இங் முன்வைத்த ஆவணங்களிலிருந்து நோ, தஞ்சோங் காராங் எம்பி ஆன ஆண்டான 1995-இல் அந்த நிலத்தை வாங்கியதாக தெரிகின்றது.2009-இல் அவர் விவசாய அமைச்சரானார்.