“அம்பிகா கடற்கொள்ளைக்காரி” என்னும் கேலிச் சித்திரப் புத்தகம் தொடர்பில் பாஸ் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்

பக்காத்தான் ராக்யாட்டையும் தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே-யையும் கடுமையாக தாக்கும் கேலிச் சித்திரப் புத்தகம் ஒன்று பாஸ் இளைஞர்களிடையே ஆத்திரத்தை மூட்டியுள்ளது

குத்துவாளை  வைத்துக் கொண்டிருக்கும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், அவருக்கு பின்னால் நிற்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் முகமட் சாபு, பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் உட்பட எல்லோரும் கடற்கொள்ளையருக்கான உடையில் காணப்படுவதைக் காட்டும் கேலிச் சித்திரங்கள் அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

அதன் கீழ் எழுதப்பட்டுள்ள விளக்கம் இது தான்: “கோலாலம்பூர் கடற்கொள்ளையர்கள். அரச வர்ணத்தில் கொள்ளையர்கள்” என பெர்சே-யின் முத்திரை வர்ணமான மஞ்சள் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் அந்த நாகரீகமற்ற செய்கையைக் கண்டிக்கிறோம். இது தேவையற்றது. அவதூறு கூறுவதாகும். நீங்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன் ஒப்புக்கொள்ளா விட்டால் நாம் விவாதம் நடத்தலாம் அல்லது கலந்துரையாடலை நடத்தலாம். அவமானப்படுத்தும் இத்தகைய கேலிச் சித்திரங்களுக்கு அவசியமே இல்லை,” என பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் இன்று பிற்பகல் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்..

மற்ற கேலிச் சித்தரங்களில் அன்வார் இப்ராஹிம் இணக்கமான நிலையில் இருப்பதைக் காட்டும் கேலிச் சித்தரமும் ஒன்றாகும். அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய குதப்புணர்ச்சி வழக்கையே அது அவ்வாறு சுட்டிக் காட்டுகிறது என்பது தெளிவு.

அந்தக் குறிப்பிட்ட பக்கத்தின் படத்தை மலேசியாகினி பெற முடியவில்லை. வெளியீட்டுக்கு மிகவும் ஆபாசமாக இருப்பதால் அது அகற்றப்பட்டுள்ளது.