FGV பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து 5,000 பேர் இஸ்தானாவுக்கு ஊர்வலம்

Felda Global Ventures Holdings’ (FGV) பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை ஆட்சேபித்து கோலாலம்பூரில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர்.

அவர்கள் அதன் தொடர்பில் அகோங்கிடம் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பது அவர்களுடைய நோக்கமாகும்.

கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் பிற்பகல் மணி 2.20 வாக்கில் அந்த ஊர்வலம் தொடங்கியது.

அவர்கள் “பெல்டா தலைவர் ஈசா சாமாட்டை நீக்குங்கள், குடியேற்றக்காரர்களை விடுவியுங்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வீழ்க” எனக் கூறும் வாசகங்களை முழங்கினர்.

அந்த ஊர்வலத்துக்கு பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு அதன் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம், உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், Persatuan Anak Peneroka Felda (Anak) தலைவர் மஸ்லான் அலிமான் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆரஞ்சு நிற உடையை அணிந்திருந்த எதிர்ப்பாளர்களை பாஸ் கட்சியின் அமால் பிரிவினர் வழி நடத்தினர். இஸ்தானா நெகாராவை நோக்கி அவர்கள் சென்ற போது அவர்களுக்கு பாதுகாப்பாக அந்தப் பிரிவினர் மனிதச் சங்கிலிகளை ஏற்படுத்தினர்.

என்றாலும் அந்த ஊர்வலம் இஸ்தானா நெகாராவுக்கு இன்னும் இரண்டு கிலோமீட்டர் இருக்கும் வேளையில் ஜாலான் டூத்தாமாஸ் 1, ஜாலான் டூத்தாமாஸ் 2 ஆகியவை சந்திக்கும் இடத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் தடுப்பில் நிறுத்தப்பட்டது.

எதிர்ப்பாளர்கள் முக்கியச் சாலையான ஜாலான் டூத்தாவுக்குப் பதில் ஜாலான் ஹர்த்தாமாஸ் சாலையைப் பயன்படுத்துவதற்குப் போலீஸ் நேற்று இணக்கம் தெரிவித்த போதிலும் ஊர்வலம் அங்கு தடுக்கப்பட்டது.

இருந்த போதிலும் பேரணித் தலைவர்கள் அந்த தடுப்புக்கு அருகில் நின்று கொண்டு உரைகளை நிகழ்த்தினர். மகஜரை அகோங்கிடம் வழங்குவதற்கு தங்களது எட்டுப் பேராளர்களைக் கொண்டு செல்வதற்காக இஸ்தானா வாகனம் ஒன்றுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.