அரசாங்கம் புதிய வெளியீடுகளுக்கு அனுமதி கொடுப்பதற்குமுன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறுகிறார்.
“நான் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. எதுவும் பாதுகாப்பைப் பாதிக்குமா என்பதைப் பரிசீலீக்க வேண்டும்”, என்று இன்றுகாலை கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
அச்சக, பதிப்பகச் சட்ட(பிபிபிஏ)த்தில் திருத்தங்கள் செய்யப்படுவதால் புதிய வெளியீடுகளுக்கு உரிமம் வழங்குவதில் அரசாங்கம் இனி தாராளமாக நடந்துகொள்ளுமா என்று கேட்கப்பட்டதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த வியாழக்கிழமை, நாட்டு மக்களுக்குத் தொலைகாட்சிவழி உரையாற்றிய நஜிப், தம் உரையில் பல சீரமைப்புகளை அறிவித்தார்.அவற்றில் செய்தித்தாள் உரிமத்துக்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும், அதை ஆண்டுக்காண்டு புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். ஆனால், கொடுக்கப்படும் உரிமத்தை உள்துறை அமைச்சர் நினைத்தால் எந்த நேரத்திலும் ரத்துச் செய்யலாம்.
கடந்த ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட பிகேஆர் கட்சிப் பத்திரிகையான சுவாரா கெஅடிலானின் உரிமம் அதற்குத் திரும்பக் கொடுக்கப்படுமா என்று வினவியதற்கு ஹிஷாமிடின் கருத்துசொல்ல விரும்பவில்லை.
“மாற்றுக்கட்சியினருக்கு நாங்கள் என்ன சொன்னாலும் போதாது”, என்றார்.
உள்துறை அமைச்சின் விருப்பத்திற்கேற்ப வெளியீடுகளுக்கான உரிமம் ரத்துச் செய்யப்படும் அபாயம் எப்போதும் இருக்கத்தானே செய்யும் என்று குறிப்பிட்டதற்கு பிபிபிஏ-இல் செய்யப்படும் திருத்தங்கள் குறித்து அவசரப்பட்டு முடிவு செய்துவிட வேண்டாம் என்று ஹிஷாம் கேட்டுக்கொண்டார்.
“அது பற்றி விவரிக்க இது தருணமல்ல. இது மூன்று அமைச்சுகள் சம்பந்தப்பட்டது.(தகவல்,தொடர்பு பண்பாட்டு அமைச்சர்) ரயிஸ் யாத்திம்,(நடப்பில் சட்ட அமைச்சர்) நஸ்ரி அப்துல் அசீஸ், நான் ஆகிய மூவரும் சம்பந்தப்பட்டிருக்கிறோம்…இதில் நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்”.
நடப்பில் உள்ள பிபிபிஏ சட்டப்படி, அச்சடிக்கப்படும் பத்திரிகைகளுக்கான உரிமத்தை ஒவ்வோராண்டும் புதுப்பிக்க வேண்டும். இதனால், உரிமத்தைப் புதுப்பிக்க நினைப்போர் அரசாங்கச் சொல்படி நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
கோட்டா ஷா ஆலம் சட்டமன்ற உறுப்பினர் எம். மனோகரன், தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள கருத்து பற்றிக் குறிப்பிட்ட ஹிஷாம், அது ஒரு “சினமூட்டும்” கருத்து என்றார்.அத்துடன் புதிய பாதுகாப்புச் சட்டங்கள் சில வரம்புகளையும் கொண்டிருக்கும் என்றார்.
“நஜிப், புதிய அரசியல் நிலவரத்தை அறிந்தவராகக் கொண்டுவரும் புதிய சட்டங்களில் அரசியல் பேசுவதற்கு உரிமையும் இருக்கும் வரம்புகளும் இருக்கும்.அதே வேளை அரசியல் அதிகாரத்தையும் ஆதரவையும் பெறுவதற்காக, நாட்டுப்பற்றையும் இன ஒருமைப்பாட்டையும் சமயங்களுக்குள்ள மதிப்பு மரியாதையையும் பணயம் வைக்க இடமளிக்கப்படாது”, என்றாரவர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட ரத்து உள்பட பிரதமர் அண்மையில் அறிவித்த சீரமைப்புகள் குறித்து அம்னோ தலைவர்கள் அடிநிலை உறுப்பினர்களிடம் விளக்கமளித்து வருகிறார்கள் என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.