தேசிய நல்லிணக்கச் சட்டம் தவறான பெயராக இருக்கலாம்

தேசிய நிந்தனைச் சட்டம் தேர்வு செய்யப்பட்டு அமலாக்கப்பட்டதைப் போன்று அதன் விதிமுறைகளை உள்ளடக்கிய தேசிய நல்லிணக்கச் சட்டத்தை தேசிய நிந்தனைச் சட்டதிற்கு மாறாக கொண்டு வரப்படுவதை விட தேசிய நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதே நல்லது என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார்.

தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளது பற்றிய தமது எண்ணங்களை அவர் மலேசியாகினியிடம் வெளிப்படுத்தினார்.

அவர் மலாக்கா ஜோகூர் கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவரும் ஆவார்.

“எந்த அரசியல் தரப்பிலும் சாயும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் புதிய சட்டம் சமய  இன ஒற்றுமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த விஷயம் மீது கருத்துரைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்றார் அவர்.

“உத்தேசிக்கப்படும் புதிய சட்டம் தவறான பெயரைக் கொண்டதாகப் போய் விடக் கூடும்,” என மலேசியா, சிங்கப்பூர், புருணை ஆகியவற்றுக்கான கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் நடப்புத் தலைவருமான பால் தான் சொன்னார்.

“அது தேச நிந்தனைச் சட்டத்தை போன்று தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் அமலாக்கப்பட்டால் அது நல்லிணக்கத்தை வளர்ப்பதற்குப் பதில் ஒற்றுமைச் சீர்குலைவுக்கு வழி வகுத்து விடக் கூடும்.”

மலாய் ஆட்சியாளர்கள் நிலை முதல் இஸ்லாத்தின் நிலை வரை பல விஷயங்களை தேச நிந்தனைச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

மலேசிய அரசியலில் புனிதமானதாகக் கருதப்படும் அமைப்புக்களுக்கும் நிலைகளுக்கும் பேச்சுரிமை சுதந்திரத்துக்கும் இடையில் சம நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய தேசிய நல்லிணக்கச் சட்டம் தயாரிக்கப்படும் என நஜிப் அறிவித்துள்ளார்.

முதிர்ச்சி அடைந்துள்ளதற்கான அறிகுறி

“அண்மைய ஆண்டுகளிl நடந்ததை நினைத்துப் பாருங்கள்,” என ஆயர் பால் தான் சொன்னார்.

“முஸ்லிம்களை கிறிஸ்துவ சமயத்திற்கு மாற்றுவதாக பூச்சாண்டி காட்டிய ஒரிரு சமயத் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். அவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரங்களை வழங்கவே இல்லை. இருந்தும் அவர்கள் தேச நிந்தனைக்காக நீதிமன்றத்துக்கு இழுக்கப்படவில்லை,” என அவர் குறிப்பிட்டார்.

“என்றாலும் அந்தத் தனிப்பட்ட நபர்கள் ஆற்றிய உணர்வுகளைத் தூண்டும் உரைகளுக்கு பொது மக்கள் மயங்காமல் இருப்பது மிகவும் வியப்பளிக்கும் விஷயமாகும். அந்த நிலை மிகவும் மகிழ்ச்சிக்கு உரியதாகும்.”

சுய நன்மைக்காக உணர்வுகளைத் தூண்டி விடும் சமய வேடதாரிகளுக்கும் நாகரீகமான வாதங்களை வலியுறுத்தும் ஜனநாயகவாதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதையே அது காட்டுகிறது.