பெர்க்காசா: டோங் ஜோங்கை எதிர்ப்பதற்கு காபேனாவுக்கு உரிமை உண்டு

சீனர் கல்வி உரிமைகள் போராட்ட அமைப்பான டோங் ஜோங் பிரதமரிடம் சமர்பிக்க எண்ணியுள்ள மகஜரை தேசிய எழுத்தாளர் சங்கமான காபேனா எதிர்ப்பதை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி வரவேற்றுள்ளார்.

காபேனா தலைவர் அப்துல் லத்தீப் அபுபாக்கார், தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பல மொழிக் கல்வியை அங்கீகரிக்க வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது தமக்கு “நிம்மதி” அளித்துள்ளதாக அவர் சொன்னார்.

சீனப் பள்ளிக்கூடங்களில் பாஹாசா மலேசியாவின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் மீது டோங் ஜோங்-குடன் பேச்சு நடத்தவும் தாம் தயாராக இருப்பதாகவும் அப்துல் லத்தீப் கூறினார்.

“காபேனாவுக்கும் டோங் ஜோங்-ற்கும் இடையில் சந்திப்பு நிகழுமானால் அதில் பங்கு கொண்டு தேசியக் கல்விக் கொள்கை பற்றியும் தேசிய மொழி என்ற முறையில் மலாய் மொழியின் நிலை குறித்தும் டோங் ஜொங்-குடன் விவாதம் நடத்த பெர்க்காசா தயாராக இருக்கிறது,” என்றும் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

இம்மாத இறுதிக்குள் பிரதமரிடம் சமர்பிப்பதற்காக 10 அம்ச மகஜர் ஒன்றை தானும் ஏழு இதர அரசு சாரா அமைப்புக்களும் தயாரித்து வருவதாக ஐக்கிய சீனப் பள்ளிக்கூடக் குழுக்கள் சங்கம் என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் டோங் ஜோங் கடந்த வாரம் அறிவித்தது.

சீனப் பள்ளிக்கூடங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, சீனப் பள்ளிக்கூடங்கள் வழங்கும் யூஇசி என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை அரசாங்கம் அங்கீகரிப்பது போன்ற நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அந்த அமைப்புக்கள் எண்ணம் கொண்டுள்ளன.

பல மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக கூறப்படும் அந்த மகஜரை ஏற்கனவே தேவான் பாஹாசா டான் புஸ்தகா, அபிம் என்ற Angkatan Belia Islam Malaysia, மலாய் ஆலோசனை மன்றம் போன்ற பல அரசு சாரா அமைப்புக்கள் நிராகரித்துள்ளன.

மலேசியச் சீனர்கள், மசீச-வுக்குத் திரும்ப வேண்டும் என்றும் மலேசிய மலாய்க்காரர்கள் அம்னோவை ஆதரிக்க வேண்டும் என்றும் நேற்றிரவு ஷா அலாமில் சிலாங்கூர் பெர்க்காசா தலைமையகத்தை திறந்து வைத்துப் பேசிய இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

இந்த நாடு அமைதியாக இருப்பதற்கு மற்ற இனங்களுடன் குறிப்பாக மசீச-வுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அம்னோ தயாராக இருப்பதே காரணம் என்றார் அவர். இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுக்கும் போக்கை பின்பற்றுவதாகவும் அவர் சொன்னார்.

 

TAGS: