போலீஸ் பட்ஜெட்டில் தவறான துறைகளுக்கு முன்னுரிமை

எம்பி பேசுகிறார்: LIEW CHIN TONG கூட்டரசு வரவு-செலவுத் திட்டத்தில் 2010,2011,2012 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் அரசாங்கம் போலீசைக் குற்ற எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதைவிட ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொண்டிருப்பதைதான் காண்பிக்கின்றன.

குற்றவிகிதம் உச்சத்தில் இருக்கும் வேளையில் போலீசுக்கான பட்ஜெட்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது பொருத்தமானதே.

போலீஸ் ஆளும் கட்சியின் கொள்கைகளைத்தான் அமல்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.அந்த வகையில் தவறான துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதற்கு போலீசைக் குறை சொல்ல முடியாது.அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைச் செய்ய வேண்டியது போலீசின் கடமையாகிறது.

போலீஸ் படைக்கு 2010-இல் ரிம4.5பில்லியன்; 2011-இல் ரிம5.8பில்லியன்; 2012-இல் ரிம6.3பில்லியன் ஒதுக்கப்பட்டது.2010-க்கும் 2012-க்குமிடையில் அதற்கான ஒதுக்கீடு 40விழுக்காடு  கூடியுள்ளது.

ஆனால்,கடந்த மூன்றாண்டுகளில் மொத்த ஒதுக்கீட்டில் 8விழுக்காடுதான் குற்றவியல் புலன்விசாரணைகளுக்குச் சென்றுள்ளது. எஞ்சிய தொகை எதற்குச் சென்றது?

-நிர்வாகம், தளவாடங்களுக்கு 2010-இல் 59விழுக்காடு, 2011-இலும் 2012-இலும் 55விழுக்காடு,

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு 2010-இல் 22விழுக்காடு,2011-இல் 25விழுக்காடு 2012-இல் 27விழுக்காடு-அதாவது 2010-இல் ரிம975மில்லியனும் 2011-இல் ரிம1.46பில்லியனும் 2012-இல் ரிம1.68பில்லியனும் ஒதுக்கப்பட்டது.

2010க்கும் 2012-க்குமிடையில் இந்த வகை செலவினத்துக்குச் செய்யப்பட்ட ஒதுகீட்டில் 72விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி அரசாங்கத்தைப் பாதுகாக்கத்தான் செலவானதே தவிர மக்களைப் பாதுகாப்பதற்கு அல்ல.

உளவுபார்க்க(குறிப்பாக சிறப்புப் பிரிவுக்கு) ஒதுக்கப்பட்டது 6விழுக்காடு.ஒரு ஜனநாயக நாட்டில் சிறப்புப் பிரிவு போன்ற உளவுத் துறை தேவையற்றது.

உளவுத் துறை  பற்றி விவரிக்கும் 2012 பட்ஜெட், நாட்டைப் பாதுகாக்க, கம்முனிஸ்டுகள் பற்றியும் கீழறுப்பு,தீவிரவாதிகள் பற்றியும் உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் பற்றியும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உளவுத்தகவல் சேகரிப்பது முக்கியமாகும் என்கிறது.

ஹட்ஜாய் உடன்பாடு காணப்பட்டு இருபதாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அம்னோ, சீனாவின் கம்முனிஸ்ட் கட்சியுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் கம்முனிஸ்டுகள் அச்சுறுத்தல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
—————————————————————————————————-

LIEW CHIN TONG புக்கிட் பெண்டேரா டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்.