நோ: “இறால் வளர்ப்புத் தொழிலில் நான் பணம்போட்ட பங்குதாரர் அல்ல”

தஞ்சோங் காராங்கில் பிரிஸ்டின் அக்ரோபூட் வைத்துள்ள இறால்வளர்ப்புப் பண்ணையில் தமக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார்.

அப்பண்ணை அமைந்துள்ள நிலம்தான் தம்முடையது என்றும் அதை அந்த நிறுவனத்துக்குக் குத்தகைக்குக் கொடுத்திருப்பதாகவும் நோ கூறினார்.

“பங்குகளா, என்ன பங்குகள்?நிலம்தான் என்னுடையது.நிலத்தை அப்படியே போட்டு வைத்து களைகள் வளர விட்டுவிட முடியுமா?”, என்றவர் வினவினார். அமைச்சர் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் மலேசிய விவசாயம், தோட்டக்கலை,வேளாண் சுற்றுலா கண்காட்சியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த சனிக்கிழமை சின் சியு டெய்லி, அமைச்சரை மேற்கோள்காட்டி, அவருக்கு இறால் வளர்ப்புத்தொழிலில் பங்கிருப்பதாகக் கூறியிருந்தது. ஆனால், நிறுவனங்கள் ஆணையத்தில் சோதனை செய்து பார்த்ததில் நோவாவுக்கு அதில் பங்குரிமை எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.