அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிடிக் ஹசானின் புதல்வியுடன் தொடர்புடையவை எனக் கூறப்படும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் சூரிய வெப்ப எரிசக்தி திட்டத்தின் வழி ஆண்டுக்கு 70 மில்லியன் ரிங்கிட்டைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த மதீப்பீட்டை டிஏபி-யின் பிரச்சாரப் பிரிவுத் தலைவரும் அதன் தலைமைப் பொருளாதார வல்லுநருமான டோனி புவா இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் வழங்கினார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Feed-in Tariff (FiT) திட்டத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள 12 நிறுவனங்களின் கட்டுப்பாடு சிடிக்-கின் புதல்வி சுசி சுலியானா வசம் உள்ளதாக கூறப்படுகின்றது.
சூரிய வெப்ப எரிபொருள் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள அளவில் 32.4 விழுக்காடு அல்லது 45.9 விழுக்காட்டை சுசி சுலியானாவின் கட்டுப்பாட்டுக்குள் விழுவதற்கு அந்த ஏற்பாடு வகை செய்துள்ளதாக புவா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
அது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வரம்பான ஒரு மெகாவாட் முதல் 5 மெகாவாட் வரையிலான எரிசக்தியைக் காட்டிலும் கூடுதல் என்றும் அவர் தெரிவித்தார்.
சுசி சுலியானாவின் 12 நிறுவனங்களில் எட்டு, விண்ணப்பம் செய்வதற்கான காலக் கெடுவான 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டதாகவும் புவா குற்றம் சாட்டினார்.
“இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில் அந்த நிறுவனங்களில் 9, 100 ரிங்கிட் செலுத்தப்பட்ட மூலதனத்தை மட்டுமே கொண்டுள்ளன.”
புவா மீது அவதூறு வழக்குப் போடப் போவதாக செடா எனப்படும் நீடித்த எரிசக்தி மேம்பாட்டு வாரியத் தலைவர் போங் சான் ஒன் மருட்டியுள்ளதற்கு புவா பதில் அளித்தார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மருட்டுவதற்கு பதில் போங், அந்த அளவில் கணிசமான பகுதி சுசி சுலியானாவின் நிறுவனங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை நிரூபிப்பதற்கு தொழில் நுட்ப, நிதி விவரங்களை வழங்க வேண்டும் என்றார் புவா.
புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள் அளவில் ஏக போக உரிமைகள் கிடைக்காமல் தடுக்கும் வகையில் 2010ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்திச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும் அவை ஒரே தரப்பிலிருந்து வந்துள்ளன. அவை அனைத்துக்கும் ஏன் அனுமதி வழங்கப்பட வேண்டும் ?” என்றார் அவர்.