பிஎஸ்எம் ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது

அவசரகாலச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்ட அறுவர் உள்பட மலேசிய சோசலிஸ்ட் (பிஎஸ்எம்) கட்சியினர் 30 பேருக்கு எதிரான குற்றச்சாட்டைப் போலீசார் கைவிட்டனர்.

பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டிலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்றும் கூறினார்.

அந்த 30 பேரும் ஜூன்  25-இல், ‘Udahlah Bersara’ என்னும் நிகழ்வை நடத்துவதற்காக பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், பேரரசருக்கு எதிராக போர் தொடுக்கத் திட்டமிடுகிறார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பினாங்கில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் அறுவர், EO6 எனப் பெயர் பெற்றிருப்போர், ஜூலை 9 பெர்சே பேரணிக்குத் திட்டமிட்ட முக்கிய புள்ளிகள் என்று கூறப்பட்டு 26 நாள்களுக்கு அவசரகாலச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு ஆகஸ்ட் 3-இல், சதிநாச வேலைகளுக்குத் திட்டமிடும் ஆவணங்களை வைத்திருந்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அவ்வறுவரும் சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் ஜெயக்குமார் தேவராஜூ, பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த சூ சொன் காய், சரத் பாபு, எம். சரஸ்வதி, எம், சுகுமாறன், ஏ.லெட்சுமணன் ஆகியோராவர். மற்ற 24 பேர்மீதும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 30 பேர்மீதான வழக்கு அக்டோபர் 10-இல், விசாரணைக்கு வருவதாக இருந்தது.