அம்னோ ஆதரவு வலைப்பதிவர் ஒருவர் அன்வார் பாலியல் விவகாரமொன்றில் ஈடுபட்டது உண்மைதான் என நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியிருப்பது குறித்து பிகேஆர் தலைவர் கருத்துக்கூற மறுத்து விட்டார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைதியான மறுமொழி கூறி வந்த அன்வார், இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாது என்றார்.
“ஒழுக்கம், சூதாட்டம், தீயொழுக்கம், கொடுமை, மற்றவர்களின் குணநலன்களை விமர்சித்தல் போன்ற விவகாரங்கள் பற்றிப் பேசவோ அவை பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கவோ மாட்டேன்”, என்றாரவர்.
வலைப்பதிவரான பப்பா கோமோ, வார இறுதியில் வீடியோ காட்சி ஒன்றைப் பதிவேற்றம் செய்து அது அன்வாரும் ஒரு வணிகரான ஷாஸ்ரில் எஸ்கே அப்துல்லாவும் அன்வார் பாலியல் லீலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கட்டிடத்துக்குள் நுழைவதைக் காண்பிப்பதாகக் கூறியிருந்தார்.
பப்பா கோமோவின் வலைப்பதிவில் இடம்பெற்ற அந்த வீடியோ காட்சி, கார்கோசாவில் செய்தியாளர்களுக்குப் போட்டுக்காண்பிக்கப்பட்ட வீடியோவின் கடைசிப் பகுதியுடன்-ஒரு மனிதர் (அன்வார் என்று கூறப்படுகிறது) உடை அணிந்து வெளியேறுவதைக் காண்பிக்கும் பகுதியுடன்- இணைக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் பதிவாகியிருந்த தேதியும் நேரமும் இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தவை என்பதைக் காட்டின.
இந்த வீடியோவில் 2011 ஜனவரி 13-இல், பதிவான இன்னொரு வீடியோவும் இருப்பதாகக் கூறப்பட்டு அதிலிருந்து மாதிரிக்கு ஒரு சிறு பகுதியையும் இணைக்கப்பட்டிருந்தது..
இரகசிய கேமிராவில் பதிவான “புதிய வீடியோ” ஒரு மனிதர் (அன்வார் என்கிறார்கள்) குளியல் அங்கியுடன் இருப்பதைக் காண்பிக்கிறது.
இதை ஒரு முன்னோட்டம் என்று குறிப்பிட்ட அந்த வலைப்பதிவர் புதிய வீடியோவை வெளியிடப்போவதாக மருட்டியுள்ளதுடன் “2011 ஜனவரி 12-13-இல் அன்வார் எங்கிருந்தார்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அன்வார் இப்ராகிமின் இந்த(புதிய) செக்ஸ் வீடியோவை வெளியிடலாமா …வேண்டாமா?”, என்றவர் கிண்டலடித்துள்ளார்.
நேற்று பிகேஆர் தகவல் பிரிவு உதவித் தலைவர் ரோசான் அஸன், பப்பா கோமோவை விசாரிக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார்.
பிஎன் ஆதரவாளர் என்று கூறிக்கொள்ளும் பப்பா கோமோ-வை, கார்கோசா செக்ஸ் வீடியோவைப் பதிவேற்றம் செய்ததற்காக மலேசிய தகவல்தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) ஏற்கனவே விசாரணை செய்துள்ளது.