இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெட்ரிக்குலேசன் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வந்த வண்ணமிருக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். இது குறுகிய காலப் படிப்பு என்பதால் மாணவர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆட்படுத்தும் நடவடிக்கைகளைக் கல்வி இலாக்கா செய்யக்கூடாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறுகிறார்.
இவ்வாண்டு மெட்ரிக்குலேசன் கல்லூரிகளில் மேலும் ஆயிரம் இந்திய மாணவர்களைச் சேர்க்க அரசாங்கம் அறிவித்திருந்தாலும், மாணவர்கள் தங்களுக்கு இடம் கிடைத்துள்ள விவரங்களைப் பெறுவதில் அதிக சிரமங்களை அடைகின்றனர். சில மாணவர்கள் தங்கள் பெயர்களைத் தொலைபேசி குறுந்தகவல் வழியும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இணையத்தின் வாயிலாகவும் கூட சரிபார்க்க முடியவில்லை என்று பலர் புகார் கூறுகின்றனர்.
நாளை 18 ஆம் தேதி புதன்கிழமை மெட்ரிக்குலேசன் இடம் கிடைத்தவர்கள் பதிந்துகொள்ள இறுதி நாளான போதிலும் பலருக்கு அது குறித்த கடிதம் வந்து சேரவில்லை. சிலர் அரசு சார்பற்ற இயக்கங்களின் வழி தங்களுக்கு இடம் கிடைத்துள்ளத்தை அறிந்து கொண்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அதன் பின்னரும் மாணவர்களின் விவரங்களைக் குறுந்தகவல் வாயிலாகவும் இணையத்தின் வாயிலாகவும் கூட உறுதிப்படுத்த முடியவில்லை என்றாரவர்.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி திங்கள்கிழமை தனது வீட்டு முகவரிக்குக் கடிதம் வந்தது ஆனால் கடிதத்தில் காணப்பட்டது இன்னொரு ணவரின் விவரம் என்று ஆர். தர்ஷிணி என்ற மாணவர் கூறினார். ஆக இவருக்கு வழங்கப்பட வேண்டிய கடிதம் எவருக்கு அனுப்பப் பட்டதோ என்று அவர் வினவினார்.
“இப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் மாணவர்கள் எப்படிக் குறிப்பிட்ட காலத்தில் பதிந்து கொள்ள முடியும்? இவரைப் போன்று இன்னும் பல மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இறுதியில் இடம் வழங்கினோம் ஆனால் அவர்கள் முன் வந்து ஏற்க வில்லை என்று நொண்டிச் சாக்குகளைக் கூறவா?
“இந்தக் குளறுபடைகளிலிருந்து மாணவர்கள் விடுபட, முறையான கடிதம் மற்றும் இதர தகவல்களின் வாயிலாக தங்கள் தேர்வு பெற்றுள்ளதை அறியாத மாணவர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.
“இடைப்பட்ட காலத்தில் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் இடம் கிடைத்துச் சேர்ந்த மாணவர்கள் வேறு பல நெருக்குதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பல பெற்றோர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
“இன்னும் பல மெட்ரிக்குலேசன் மாணவர்கள் வகுப்பில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றும் மெட்ரிக்குலேசன் கல்லூரிகளோ அவர்களின் விரிவுரையாளர்களோ அதைக் கண்டு கொள்வதில்லை என்றும் அவர்களின் சிரமத்தை வெளியிட்டுள்ளனர்”, என்று சேவியர் மேலும் கூறினார்.
மெட்ரிக்குலேசன் கல்லூரிகள் அனைத்தும் முழு தங்கும் வசதிகளுடையதாக இருக்கின்ற போதிலும், படிக்க இடம் கிடைத்தாலும் தங்குவதற்கு இடமின்றிப் பெரிய சிரமத்துக்கு நம் மாணவர்கள் ஆளாகி வருகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், மெட்ரிக்குலேசனுக்கு தேர்வு பெறக்கூடிய மாணவர்கள் கல்வியில் திறமையானவர்கள், ஆனால் அவர்களை வீண் சிரமத்துக்கு உட்படுத்தி அவர்களை உற்சாகம் இழக்கச் செய்வதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.
“இச்சமூகம் உயர நாம் செய்யும் செயல் நீதியானதாக, மக்களுக்கு உண்மையாகப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். வெறும் குறுகிய அரசியல் ஆதாயத்திற்கு பாரிசான் திட்டம் போடக்கூடாது”, என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்