ஐஎஸ்ஏ ஒழிப்பு இயக்கமான ஜிஎம்ஐ, அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகளை விடுவிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நெருக்குதல் கொடுப்பதற்காக வியாழக்கிழமை வாழ்த்து அட்டை இயக்கமொன்றைத் தொடங்கும்.
அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வில் கமுந்திங் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளை விடுவிக்கக் கோரும் அட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று நேற்று அது வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
“ஐஎஸ்ஏ கைதிகளுக்கு மலேசியர்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது.மலேசியர் எவரும் இந்த அட்டைகளைப் பூர்த்தி செய்து தடுப்புக் கைதிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.அட்டைகளை ஜிஎம்ஐ தடுப்புமுகாமில் சேர்ப்பிக்கும்”, என்றந்த அறிக்கை கூறியது.
அந்த இயக்கம், கோலாலம்பூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறும் “ஐஎஸ்ஏ:கச்சிதமான சித்திரவதை” என்னும் கருத்தரங்கில் தொடக்கி வைக்கப்படும்.அக்கருத்தரங்கம் தடுப்புக் கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அனுபவிக்கும் துன்பங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கருத்தரங்கில் பாஸ் உதவித் தலைவர் முகம்மட் சாபு, சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ், முன்னால் ஐஎஸ்ஏ கைதி ஒருவரின் மனைவியான நோர்லைலா ஒத்மான், வலைப்பதிவர் வான் ஜி வான் உசேன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முகம்மட்டும் ஹிஷாமுடினும் முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளாவர்.
ஜிஎம்ஐ இதற்குமுன் கமுந்திங் தடுப்புமுகாமில் தொடர் கண்டனக் கூட்டங்களை நடத்தியது.ஆகக் கடைசியாக, ஞாயிற்றுக்கிழமை அது ஒரு கூட்டத்தை நடத்தியது.சுமார் 200பேர் அதில் கலந்துகொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து கூடுதல் நெருக்குதல் வந்தால் தடுப்புக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று அந்த அமைப்பு நம்புகிறது.
“அரசாங்கம் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன’ என்று கூறுவது உண்மையாயின் எஞ்சியுள்ள 45தடுப்புக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்”, என்றது கோரிக்கை விடுத்தது.