தேர்தல் காலத்தில் கட்சிக்கொடிகள் தேவையில்லை என்கிறார் நிக் அசிஸ்

பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், தேர்தல் பரப்புரைக் காலத்தில் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்படக்கூடாது என்பதை ஆதரிக்கிறார்.

கட்சிக் கொடிகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன.நாளாக நாளாக, சாலையோரங்களில் உடைந்த கொடிக்கம்பங்களில் கிழிந்து கந்தலான கொடிகள் அசைந்து கொண்டிருப்பது கண்ணாராவிக் காட்சியாக இருக்கும் என்றாரவர்.

கிளந்தான் மந்திரி புசாரான நிக் அசிஸிடம் தாய்லாந்தில் தேர்தல் பரப்புரைக் காலத்தில் கட்சிக்கொடிகள் பறக்கவிடப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி கருத்துக் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு கூறினார்.

“தாய்லாந்தில் நடத்தப்படுவதைப்போல் தேர்தல் பரப்புரை நடத்தப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”, என்றாரவர். நேற்றிரவு கோத்தா பாரு சுல்தான் முகம்மட் IV  விளையாட்டரங்கில் 55வது மெர்டேகா கொண்டாட்டத்தையொட்டி ‘ஜாலோர் கெமிலாங்கைப் பறக்கவிடுவோம்’ நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர் நிக் அசிஸ் செய்தியாளார்களிடம் பேசினார்.

அந்நிகழ்வில், அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்டும் கலந்து கொண்டார்.

-பெர்னாமா