பெர்சே கூட்டங்கள் சேதங்களை ஏற்படுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அதனால் அத்தகைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட வேண்டாம் என இமாம்களையும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று செர்டாங்கில் நாடு முழுவதையும் சேர்ந்த இமாம்களும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் பேசினார்.
அவர்கள் நல்ல செயல்களில் அல்லது பெரிய அளவில் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடும் மக்களான-‘muslihun’களாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
“இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடிய நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய மக்களான ‘mufsidun’களாக அவர்கள் இருக்கக் கூடாது.”
எடுத்துக்காட்டுக்கு மெக்காவிலும் மெதினாவிலும் நடைபெற்ற பெர்சே ஆர்ப்பாட்டங்களைக் குறிப்பிட்ட நஜிப், அவை மலேசியாவின் தோற்றத்தைப் பாதித்துள்ளன. நாட்டுக்கான ஹஜ் யாத்ரீகர் அளவு மீட்டுக் கொள்ளப்படுவதற்கும் வழி வகுக்கக் கூடும் என்றார்.
“நாம் அந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் சவூதி அரேபிய அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டின் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்துள்ளது.”
“இதில் வேடிக்கை ஒன்றுமில்லை. ஜெடாவை சென்றடைந்த சில நாடுகளின் யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது எனக்குத் தெரியும்,” என்றார் அவர்.
“அரசாங்கம் சரியான வழிகள் மூலம் பேசியிருப்பதாக நான் இமாம்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு சவூதி மன்னர் அப்துல்லா அப்துல் அஜிஸுடன் அணுக்கமான உறவுகள் உள்ளன. பெர்சே குறித்த உண்மையான நிலவரத்தை நான் அவருக்கு தெரிவித்துள்ளேன்,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு நமது யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என நாங்கள் கவலை அடைந்திருந்தோம். ஆனால் நமது எண்ணிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டாம் என சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு உணர்த்துவதில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.”
மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கூட்டங்களை அரசாங்கம் அனுமதிக்கிறது. ஆனால் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என அவர் அங்கு கூடியிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இமாம்கள், பள்ளிவாசல் குழு உறுப்பினர்களிடம் கூறினார்.
தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கோரி பெர்சே ஏற்பாட்டுக் குழு விடுத்த வேண்டுகோளுக்கு ஆதரவாக ஏப்ரல் 28ம் தேதி மெக்காவிலும் மெதினாவிலும் ஏப்ரல் 28ம் தேதி உம்ரா கடமையை நிறைவேற்ற சென்றிருந்த பல யாத்ரீகர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.