எஸ்பி கம்முனிஸ்டுகளையும் ஜேஐ ஆள்களையும் பெயர் குறிப்பிட முடியுமா?

 பக்காத்தானில் கம்முனிஸ்டுகளும் ஜேஐ பயங்கரவாதிகளும் ஊடுருவி இருப்பதாகக் கூறும் போலீஸ் சிறப்புப் பிரிவு அவர்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும் என்று டிஏபி தலைவர் கர்பால் சிங் சவால் விடுத்துள்ளார்.

அதை ஒரு குருட்டுத்தனமான குற்றச்சாட்டு என்று வருணித்த அவர், பக்காத்தான் ரக்யாட்டைக் கீழறுக்கும் நோக்கத்துடன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றார்.

“பக்காத்தான் ரக்யாட்டில் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் ஜேஐ உறுப்பினர்களையும் கம்முனிஸ்டுகளையும் பெயர் குறிப்பிட தயாரா என்று சிறப்புப் பிரிவுக்கு சவால் விடுக்கிறேன்.இது மாற்றரசுக் கட்சிக் கூட்டணியைக் கீழறுப்புச் செய்யும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை”, என்றாரவர்.

இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், கர்பாலை அவரது தேசநிந்தனை வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

முன்னாள் ஜும்மா இஸ்லாமியா(ஜேஐ) பயங்கரவாதிகளும் கம்முனிஸ்டுகளும் மாற்றரசுக் கட்சிகளில் ஊடுருவி, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்க முயன்று வருவதாக போலீஸ் சிறப்புப் பிரிவின் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நேற்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய இளம் தலைவர்கள் மாநாட்டில் பேசிய E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவு உதவி இயக்குனர் முகம்மட் சொபியான் முகம்மட் மகினுடின், ஜேஐ உறுப்பினர்கள் பாஸிலும் கம்முனிஸ்டுகள் டிஏபி-இலும் ஊடுருவ முயல்வதாகக் கூறினார்.

“பிகேஆர், பிஎஸ்எம் தலைவர்கள் பலர், அடிக்கடி பெங்கோக்குக்கும் தென் தாய்லாந்துக்கும் செல்கிறார்கள்.அவர்கள் முன்னாள் கம்முனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் இரகசிய சந்திக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

“அதன் விளைவாக, நாட்டின் அடிப்படை விழுமியங்களைப் பாதிக்கக்கூடிய புதுப்புது அரசியல் சிந்தனைகள் எல்லாம் உருவாகி வருகின்றன”, என்று முகம்மட் சொபியான் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.