டிஏபி, தனக்கு கம்யூனிஸ்டுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி சீனாவின் கம்முனிஸ்டுக் கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது பிஎன்தான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
2009 அக்டோபர் 12-இல்,அம்னோ இளைஞர் பகுதி, பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தது என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று பத்திரிகை அறிக்கை ஒன்றில் கூறினார்.
பிஎன் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் (வலம்) தலைமையில் செயல்படும் அச்செயலகம், தொடர்ந்து இருதரப்பு நிகழ்வுகளை நடத்தி இரு அமைப்புகளுக்குமிடையில் உறவுகளை மேலும் வலுப்படுத்த நோக்கம் கொண்டிருக்கிறது.
“இது அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கும் தொடர்பல்ல, கட்சிக்கும் கட்சிக்குமிடையில், கைரி அறிய அவரின் முழு அனுமதியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கும் தொடர்பு”, என்று லிம் கூறினார்.
பாஸிலும் டிஏபியிலும் ஜும்மா இஸ்லாமியா(ஜேஐ)பயங்கரவாதிகளும் கம்முனிஸ்டுகளும் ஊடுருவி இருப்பதாக போலீஸ் ஸ்பெசல் பிராஞ்ச்(எஸ்பி) E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவு உதவி தலைமை இயக்குனர் முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின் தெரிவித்துள்ளது பற்றிக் கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார்.
ஹிஷாம் ஆதாரம் காண்பிக்க வேண்டும்
சிஒய்எல்லுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ள கைரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத முகம்மட் சோபியானும் மற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என்று லிம் குறிப்பிட்டார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட எந்த டிஏபி தலைவரும் கம்முனிச தொடர்புள்ளவர் எனக் குற்றம் சாட்டப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட லிம், அரசாங்கம் சீனா, கியூபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளுடன் அரசதந்திர தொடர்பு வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி அதை எஸ்பி ஆட்சேபிப்பதில்லை என்றார்.
“டிஏபிக்கு கம்யூனிஸ்டு தொடர்பு உண்டு என்று கூறுவது ஒரு தேர்தல் தந்திரம்.அதன்வழி மலாய்க்காரர்களுக்கு அச்சத்தை ஊட்டி அவர்களின் ஆதரவை அம்னோ/பிஎன் பக்கம் திருப்புவதுதான் அதன் அரசியல் நோக்கமாகும்”.
டிஏபி-இல் கம்யூனிஸ்டு ஊடுருவல் என்று கூறும் போலீசிடம் அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் உத்தரவிட வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.
“ஹிஷாமுடின் அதைச் செய்யத் தவறினால் போலீஸ் ஸ்பெசல் பிராஞ்சில் அம்னோ ஊடுருவி உள்ளதாகத்தான் அர்த்தமாகும்.
“மசீச அமைச்சர் ஒருவரைப் போல் டிஏபி தலைவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை.ஆனாலும் டிஏபிக்கு மலேசியாவிடம் விசுவாசம் உண்டா என்றுதான் கேள்வி கேட்பார்கள்.இதெல்லாம் நம்பிக்கை இழந்துவிட்ட அம்னோவின் தந்திரங்கள்”, என்றாரவர்.