பிகேஆர்: விசாரணை இல்லாத தடுப்புக் காவல் தொடரும்

கூட்டரசு அரசியலமைப்பின் 149வது பிரிவின் கீழ் தயாரிக்கப்படும் புதிய பாதுகாப்புச் சட்டங்கள் விசாரணை இல்லாமல் ஒருவரைத் தடுத்து வைப்பதற்கான அதிகாரங்களை அரசாங்கத்துக்கு வழங்கும்.

இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகிறார். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கை விட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்துள்ள வாக்குறுதி பற்றி சுவா கருத்துரைத்தார்.

“சட்டத்துறையில் பயிற்சி இல்லாத பலருக்கு  149வது பிரிவு பற்றி எதுவும் தெரியாது. நாம் 149வது பிரிவைச் சோதனை செய்தால் பாதுகாப்பு என்னும் பெயரில் தனிநபர்களுடைய  சுதந்திரத்தை மறுக்கவும் அவர்களை தடுத்து வைக்கவும் அது அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கிறது,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அகோங்கிற்கு விசுவாசத்தைக் காட்டாதவர்கள், இனங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்துகின்றவர்கள், பொது ஒழுங்கிற்கு சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் ஆகியோர் மீது மட்டும் அந்த அதிகாரங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

என்றாலும் அத்தகைய சட்டங்கள் கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவற்கும் சங்கங்களை அமைப்பதற்கும் உள்ள சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப இல்லை என சுவா குறிப்பிட்டார்.

இசா ரத்துச் செய்யப்பட்டதும் அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்- புதிய சட்டங்களின் கீழ் அவர்களுடைய தடுப்புக் காவல் காலம் நீட்டிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

சமூக சுதந்திரங்கள் மீது நஜிப் அறிவித்த சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இசா-வுக்குப் பதில் இரண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

அந்தச் சீர்திருத்தங்கள் கற்பனை செய்யப்படும் அளவுக்கு விரிவான மாற்றங்களை கொண்டு வராது என்பதற்கான “அபாய அறிகுறிகள்” தென்படுவதால் தாம் அவை குறித்து சந்தேகம் கொள்வதாகவும் அந்த பத்து எம்பி குறிப்பிட்டார்.

“வரையப்படும் இரண்டு சட்டங்களும் அரசாங்கத்திற்கு அதே அதிகாரங்களை வழங்கும் என்று துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நேற்று தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், புதிய சட்டங்களை வரைந்து முடிக்க ஒராண்டு பிடிக்கலாம் என கூறியுள்ளார்,” என்றார் சுவா.

புதிய சட்டங்கள் மனித உரிமைகளைக் காட்டிலும்  அமைதிக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்றாலும் மக்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்றும் முஹைடின் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு கேள்வி

அந்த சீர்திருத்தங்களை அமலாக்குவதில் அரசாங்கம் உண்மையான போக்கை கடைப்பிடிக்கிறதா என கேள்வி எழுப்பிய சுவா, பிகேஆர் ஏடான சுவாரா கெஅடிலான் இன்னும் சட்டப்பூர்வமாக விற்கப்பட முடியாது என்பதை சுட்டிக் காட்டினார்.

அச்சுக்கூட, வெளியீட்டு அனுமதிச் சட்டத்தின் விதிமுறைகளை அந்தக் கட்சி மீறியதாகக் குறிப்பிட்டு அந்த ஏட்டின் வெளியீட்டு அனுமதியை உள்துறை அமைச்சு கடந்த ஆண்டு மீட்டுக் கொண்டது.

“சுவாரா கெஅடிலானுக்கும் மற்ரும் பல வெளியீடுகளுக்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.”

“உண்மையான சீர்திருத்தங்கள் இருந்தால் அரசாங்கம் அதில் ஈடுபாடு காட்டி அவற்றை துணிச்சலாக அமலாக்க வேண்டும் என்ற எங்கள் அறைகூவலை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றும் அந்த பத்து எம்பி மேலும் கூறினார்.