கம்யூனிஸ்டு நாடுகளுடன் உறவு தப்பல்ல

மலேசிய அரசாங்கம் கம்முனிஸ்டு நாடுகளுடன் அரசதந்திர உறவு கொண்டிருப்பதைத் தற்காத்துப் பேசிய பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், அது வணிகத்தைப் பெருக்கி மலேசியப் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் நன்மை சேர்க்கிறது என்றார்.

“(கம்முனிஸ்டு தலைவர்கள்)மற்ற நாடுகளைத் தங்கள் காலனிகளாக ஆக்கிக்கொள்வதில்லை.அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டைக் கட்டாயப்படுத்துவதில்லை, சட்டப்பூர்வ அரசாங்கத்தை ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளில் கவிழ்க்குமாறு மக்களைத் தூண்டுவதில்லை.

“(சீனா)இஸ்ரேல் போன்றதல்ல.நாம் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை ஆனால், மாற்றரசுக்கட்சித் தலைவர்(அன்வார் இப்ராகிம்) அந்த நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்ததாக வால் ஸ்திரிட் ஜர்னல் முன்பு அறிவித்திருந்தது”, என்று அஹ்மாட் கூறியதாக மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.

அம்னோ கம்முனிஸ்டு கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் தொடர்பு வைத்திருப்பதாக பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய அஹ்மட் இவ்வாறு கூறினார்.

அரசியல் கட்சிகளில் கம்முனிஸ்டு செல்வாக்கு பற்றிய சர்ச்சையைக்குக்  காரணமானவர்  போலீஸ் ஸ்பெசல் பிராஞ்ச்(எஸ்பி) E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவு உதவி தலைமை இயக்குனர் முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின்.அவர், பாஸிலும் டிஏபியிலும் ஜும்மா இஸ்லாமியா(ஜேஐ)பயங்கரவாதிகளும் கம்முனிஸ்டுகளும் ஊடுருவி இருப்பதாக  தெரிவித்ததுதான் சர்ச்சையைத் தூண்டிவிட்டது.

பாஸ், டிஏபி இரண்டுமே, அபத்தமான குற்றச்சாட்டு என்று அதை ஒதுக்கித்தள்ளின.அவை, அம்னோ இளைஞர் பகுதிக்குத்தான் கம்முனிஸ்டுகளுடன் நெருக்கமான உறவு இருக்கிறது என்று கூறி பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அம்னோ இளைஞர்கள் அமைத்துகொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டின.