ஸபாஷுக்கு எதிராக பக்காத்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று நண்பகல், சுமார் 100 பேர்,ஷா ஆலமில் ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தலைமையகத்தில் நீர்ப்பங்கீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸபாஷ் குடிநீர் விநியோகத்தை சிலாங்கூர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் “Tolak-tolak, Syabas-Umno (ஸபாஷ்-அம்னோவை நிராகரியுங்கள்) என்றும் “ரீபோர்மாசி” என்றும் முழக்கமிட்டனர்.

ஷா ஆலம் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட், பிகேஆரின் ஸ்ரீமூடா சட்டமன்ற உறுப்பினர் ஷுஹாய்மி ஷாபியி உள்பட பல தலைவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்தனர்.

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்கள் பல என்ஜிஓ-க்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அமைதியான முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் 20 போலீஸ் படையினர் கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஸபாஷ் தலைவர் ரோஸாலிக்குக் கண்டனக் குறிப்பு ஒன்றும் வழங்கப்பட்டது.அதை ஸபாஷ் பிரதிநிதி ஒருவர் பெற்றுக்கொண்டார்.அக்குறிப்பு அவர் மாநில அரசைக் கீழறுப்புச் செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

கீழறுப்பு

ஸபாஷ் போதுமான நீரை விநியோகம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் சிலாங்கூரில் பல மேம்பாட்டுத் திட்டங்களை அங்கீகரிக்க முடியாதிருக்கிறது என்று அக்குறிப்பு கூறிற்று.

நீர் நெருக்கடி என்றால் அதை சிலாங்கூர் அரசுதான் அறிவிக்க வேண்டும் அப்படியிருக்க ஸபாஷ் அதை அறிவித்ததன்வழி மாநில அரசு பற்றி எதிர்மறையான தோற்றத்தை உருவாக்க முயல்கிறது என்றும் அது குறிப்பிட்டது.

“ஸபாஷின் இந்தப் பொறுப்பற்ற செயலால் சிலாங்கூரில் பாதுகாப்பு விவகாரங்கள் உருவாகலாம்”, என்றந்த குறிப்பு கூறியது.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்றிருந்த பிகேஆர் இளைஞர் தலைவர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி, ஸபாஷ் சிலாங்கூரின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பத்தன் மூலமாக “அரசியல் ஆடுகிறது” என்றார்.

“நீர் விவகாரத்தை வைத்து சிலாங்கூர் குடிமக்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஊட்ட வேண்டாம்.நீர் சேவைகளை மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்திடமே விட்டுவிட வேண்டும்” என்றாரவர்.

லங்காட் 2-ஆல் ஒரு சிலரே நன்மை அடைவர்

ஸபாஷ் நிறுவனத்தால் வருமானம்-தராமல் வீணாகும் நீரின் அளவில் 20விழுக்காட்டைக் குறைக்கவும் முடியவில்லை போதுமான சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகம் செய்யவும்  முடியவில்லை என்று அஸ்மிஸாம் கூறினார்.

லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதைக் குறிப்பிட்ட அஸ்மிஸாம் அதற்காகும் ரிம3.6பில்லியன் செலவைப் பொதுமக்கள்தான் ஏற்க வேண்டியிருக்கும் என்றார்.

சிலாங்கூரில் போதுமான நீர்வளம் உண்டு என்பதால் லங்காட் 2 ஆலைக்காக பகாங்கிலிருந்து நீரைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.

“தேவை நல்லதொரு நீர் சேவை, லங்காட் 2 திட்டம் அல்ல.அது மேட்டுக்குடியினரான ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை அளிக்கக்கூடியது”.

ஸபாஷ் நிர்வாகத்தில் ரமலான் மாதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும், இல்லையேல் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்துக்குப் பின்னர் ஆகஸ்ட் இறுதியில் இன்னொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றவர் எச்சரித்தார்.