சிலாங்கூர் நீர் விவகாரம்மீது கருத்துக்கணிப்பு; பிஎஸ்எம் வரவேற்கிறது

மாநில நீர் விவகார நிர்வாகம் மீது ஒரு கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி(பிஎஸ்எம்) சிலாங்கூர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், இருக்கும் வசதிகளையும் மாநில வாக்காளர் பட்டியலைக் கொண்டும் கருத்துக்கணிப்பை நடத்தலாம் என்று கூறினார்.

ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரா அல்லது மாநில அரசா என்பதை முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்றாரவர்.

“தண்ணீர் அடிப்படை உரிமைகளில் ஒன்று.அதைப் பற்றி முடிவெடுக்கும் உரிமையை அரசியல்வாதிகளில் கைகளில் மட்டுமே விட்டு வைத்திருப்பது நல்லதல்ல”, என்று அருட்செல்வன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“நீர் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள மாநில அரசு செய்துள்ள முடிவை பிஎஸ்எம் முழுமையாக ஆதரிக்கிறது.இவ்விசயத்தில் மக்களின் ஆதரவு உண்டு என்பதைக் காண்பிப்பதும் முக்கியம்.அதைக் காண்பிக்க கருத்துக்கணிப்பைக் காட்டிலும் வேறு சிறந்த வழி என்ன இருக்க முடியும்?”.

அடிப்படை வசதிகளையெல்லாம் தனியார் மயமாக்குவது மக்களைக் கொள்ளையடித்து முதலீட்டாளர்களைக் கொழுக்க வைப்பதற்கு ஒப்பாகும் என்று அருட்செல்வன் கூறினார்.

குடியிருப்பாளர் சங்கங்களும் என்ஜிஓ-களும் கருத்துக்கணிப்பு நடத்த உதவலாம், நம்பிக்கைக்குரிய மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்புகள் அது நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதிப்படுத்தலாம் என்றாரவர்.

இப்படி ஒரு கருத்துக்கணிப்பை சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா மக்களிடையே நடத்த வேண்டும் என்பதை முதலில் எடுத்துரைத்தவர் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆவார். நேற்று அதை முன்மொழிந்த அவர், சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களிலும் அதை எளிதாக செய்து முடிக்கலாம் என்றார்.