ஏப்ரல் 28-இல், பெர்சே பேரணியில் சாதாரண உடை அணிந்திருந்த மூன்று நான்கு இளைஞர்கள், போலீசாருக்கு சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) நடத்தும் பொதுவிசாரணையில் இன்று கூறப்பட்டது.
பொது விசாரணையில் 14-வது சாட்சியாக சாட்சியமளித்த சுற்றுப்பயண வழிகாட்டியான கரம் சிங்,அந்த மூன்றுநான்கு பேரும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் தடுப்புச் சுவர்போல் அணிவகுத்து நின்ற போலீசாரைச் “சீண்டிவிட” முயன்றார்கள் என்றார்.
“அவர்கள் போலீசாருக்குச் சினமூட்ட முயன்றார்கள்.பார்வைக்கு அவர்கள் ஆர்ப்பாட்டக்கார்கள்போல் தெரியவில்லை”.பேரணியில் நிகழ்ந்த மனித உரிமை அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் மூவர் குழுவிடம் கரம் சிங் இவ்வாறு கூறினார்.
மஞ்சள் நிற டி-சட்டை அணிந்த கடல்போல் காட்சியளித்த பெர்சே ஆர்ப்பாட்டக்கார்களிடையே அவர்கள் மட்டும் தனித்து நின்றது தமக்கு சந்தேகமூட்டியதாக கரம் சிங்,50, கூறினார்.
“அவர்கள் தங்களுக்குள் சைகைகள் மூலமாகவும் உடல் அசைவுகள் மூலமாகவும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள்”, என்றாரவர்.
அவர்கள் சீண்டிவிடுவதற்காகவே வந்த கையாள்களாக இருப்பார்களோ என்று சுஹாகாம் ஆணையர் டெட்டா சாமென்(இடம்) குறிப்பட்டபோது இருக்கலாம் என்று கரம் சிங் ஒப்புக்கொண்டார்.
இன்னொரு இளைஞர் கும்பல் இவர்களிடமிருந்து “உத்தரவுகளை” எதிர்பார்த்து மோட்டார் சைக்கிள்களில் காத்திருந்தது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வெடித்ததும் அந்த இளைஞர்கள் சாலையோரமாக ஓடிச் சென்று “அங்கு கிடந்த தண்ணீர் போத்தல்களையும் கற்களையும் பொறுக்கி” போலீசார்மீது வீசி எறிந்தனர்.
“போலீசார் அவர்களை விரட்டினார்கள்.ஆனால், அவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.நடுவில் என்னைச் சுற்றி இருந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டார்கள்”, என்றார்.
‘போலீஸ்மீது நம்பிக்கை போய்விட்டது’
போலீஸிடம் பிடிபடாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறியதாக கரம் சிங் கூறினார்.ஜாலான் துன் பேராக்கை நோக்கிச் சென்ற அவரும் நண்பர் ஒருவரும் விரைவு உணவகம் ஒன்றுக்குள் சென்றார்கள்.
“உள்ளே சென்றதும் அதன் பணியாளர்கள் கதவைத் தாழிட்டார்கள்.நாங்கள் பானம் வாங்கிக்கொண்டு அதைப் பருகுவதற்கு அமர்ந்தோம்.திடீரென்று நீலநிற உடையும் சாதாரண உடையும் அணிந்த போலீஸ்காரர்கள் கதவை ஓங்கித்தட்டித் திறக்குமாறு கோரினார்கள்.
“முன்பே வெளியில் நடந்ததைப் பார்த்திருந்த நான் அச்சம் கொண்டு பணியாளர்களிடம் ‘தோலோங் ஜாங்கான் புக்கா பிந்து’(கதவைத் திறக்காதீர்கள்) என்று கேட்டுக்கொண்டேன்.
“போலீஸ்காரர்கள் அவர்களின் அதிகாரத்துவ அட்டைகளைக் காண்பித்து கதவைத் திறக்கும்படி கோரினார்கள்.பின்னர் பாய்ந்து வந்த அவர்கள் அங்கிருந்தோரை அடிக்கத் தொடங்கினர்.எனக்கு முகத்தில் குத்து விழுந்தது.என்னையும் என் நண்பரையும் நாங்கள் அணிந்திருந்த மஞ்சள் டி-சட்டைகளைக் கழற்றச் சொன்னார்கள்”.
போலீஸ்காரரில் ஒருவர்,”Sial! Lu orang punya pasal, anggota kita seorang mati!” (சனியன்களா! உங்களால் எங்களில் ஒருவர் இறந்துவிட்டார்), என்று சத்தமிட்டார்.
போலீஸ்மீது நம்பிக்கை இல்லாததால் அது பற்றி கரம் சிங் போலீசில் புகார் செய்யவில்லை.
பின்னர், கரம் சிங் சட்டை இன்றியே புடு பிளாசா ரக்யாட் சென்றார்.
சுஹாகாம் பொது விசாரணைக்குத் தலைமையேற்றிருப்பவர் அதன் உதவித் தலைவர் காவ் லேக் டீ.அவருக்கு ஆணையர்கள் டெட்டாவும் மஹ்மூட் சுக்டி ஏ.மஜிட்டும் உதவியாக உள்ளனர்.