ஆஸ்திரேலியா, அடைக்கலம் நாடுவோரை அந்நிய நாடுகளில் பரிசீலிப்பதற்கான யோசனைகளை எதிர்க்கட்சிகள் நிராகரிப்பதாலும் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளை எதிர்ந்நோக்குவதாலும் தலை நிலத்தில் அத்தகைய நபர்களை தங்க வைத்து பரிசீலிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அதன் பிரதமர் ஜுலியா கில்லார்ட் கூறியிருக்கிறார்.
மலேசியா அகதிகள் மீதான ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால் அடைக்கலம் நாடுவோரை மலேசியாவில் பரிசீலினை செய்வதற்கு வகை செய்யும் ஒர் உடன்பாட்டை ஆதரிக்க எதிர்த்தரப்புத் தலைவர் டோனி அபோட் மறுத்துள்ளார்.
அதனால் நாடாளுமன்றத்தில் நாளை அந்த உடன்பாடு தாக்கல் செய்யப்படும் போது தோற்கடிக்கப்படுவது திண்ணம். எனவே அடைக்கலம் நாடுவோரை ஆஸ்திரேலியத் தலை நிலத்தில் தான் பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என கில்லார்ட் சொன்னார்.
23 மில்லியன் மக்களைக் கொண்ட ஆஸ்திரேலிய கடலோரத்தை ஆண்டுதோறும் அடைக்கலம் நாடும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றடைகின்றனர். அதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு குறித்து அரசியல் விவாதம் நிகழ்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா அடைக்கலம் நாடுவோரை பசிபிக்கிலுள்ள நாவ்ரு தீவுக்கு அனுப்பத் தொடங்கியது. இப்போது புதிய யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியப் பிரதேசத்தில் மட்டுமே அகதிகளை மீண்டும் பரிசீலினை செய்ய முடியும் என கில்லார்ட் குறிப்பிட்டார்.
அந்த யோசனைகள் தோற்கடிக்கப்படுவது சிறுபான்மை கில்லார்ட் அரசாங்கத்துக்குப் பெரிய பின்னடைவு ஆகும். அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளதை கருத்துக் கணிப்புக்கள் காட்டியுள்ளன.
மலேசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் கீழ் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் நாடியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்பும். அதற்கு ஈடாக ஆஸ்திரேலியா மலேசியாவிலிருந்து 4,000 அகதிகளை மதிப்பீடு செய்து ஏற்றுக் கொள்ளும்.
மலேசியாவுக்கு அனுப்பப்படும் அகதிகளுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாததால் அந்த உடன்பாடு செல்லாது என ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் குடிநுழைவுச் சட்டங்களை திருத்தும் யோசனைகளையும் எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.