கெடாவில் பிஎன் வெற்றி பெற்றால் முக்ரிஸ் மந்திரி புசார்

அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில் பிஎன் வெற்றிபெற்றால் ஜெர்லுன் சட்டமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் மந்திரி புசார் ஆக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

அண்மையில் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா, அம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்திய ஆய்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர் முக்ரிசுக்கு (வலம்) மிகுந்த ஆதரவு இருப்பது தெரிய வந்தது.

அவ்வாய்வில் மலாய்க்காரர்களில் 67விழுக்காட்டினர், சீனர்களில் 78 விழுக்காட்டினர், இந்தியர்களில் 71 விழுக்காட்டினர் முக்ரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கெடாவின் மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் முகம்மட் ஜமில் கீர் பஹாரோம்,மாநில பிஎன் தகவல் தலைவர் அஹ்மட் பாட்ஷா, மாநில  சட்டமன்றத்தில் எதிர்தரப்புத் தலைவராகவுள்ள மஹ்ஜிர் காலிட் போன்றோரைவிடவும் முக்ரிசுக்கே ஆதரவு மிகுந்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் அங்கும் இங்குமாக 300 பேரைத் தெரிந்தெடுத்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கலந்துகொண்ட 10,800பேரில் 76 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 16 விழுக்காட்டினர் சீனர்கள், 7 விழுக்காட்டினர் இந்தியர்கள் 1விழுக்காடு தாய் வம்சாவளியினர்.

பிஎன் வாய்ப்பு பிரகாசம்

கெடாவில் பிஎன், குறிப்பாக அம்னோ தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 52 விழுக்காட்டினர் மாநில அரசின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்தனர்.59 விழுக்காட்டினர் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்கள்.

54 விழுக்காட்டினர் பாஸ் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை, 47 விழுக்காட்டினர் பிஎன் ஆட்சியில் மலாய்க்காரர்கள் நிலைமை நன்றாக இருந்தது என நினைக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அம்னோவின் கோட்டையாக திகழ்ந்த கெடா, 2008-இல் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் பக்காத்தான் கைக்குச் சென்றது.

ஆனால், அங்கு நிலைமை சுமூகமாக இல்லை. மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக்கும்(இடம்) பக்காத்தான் மற்றும் பாஸ் தலைவர்களும் பல விசயங்களில் கருத்துவேறுபாடு கொண்டு அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.

 

TAGS: