குடியுரிமை வழங்கப்பட்டால் ‘ஆளும் கட்சிக்கு’ வாக்களிப்பது தான் அவரது முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நிரந்தரவாசி ( permanent resident ) ஒருவர் கூறிக் கொண்டுள்ளார்.
குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக அவர் பேட்டி காணப்பட்ட போது அந்த அதிகாரிகள் வெளிப்படையாகவே அவ்வாறு சொன்னதாக மின் அஞ்சல் வழி அளித்த பேட்டியில் அவர் சொன்னார். அவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
“(அவர்கள் என்னிடம் கேட்டனர்)’மலேசியக் குடியுரிமையைக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் ? உங்கள் முக்கியக் கடமை என்ன ?’
“நான் இளம் வயதினரை ஆதரிப்பேன். ஏனெனில் அது என்னுடைய விருப்பமாகும் என நான் பதில் சொன்னேன்,” என்றார் அவர். தமது விண்ணப்பத்துக்கு பாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
“(அவர்கள் பதில் அளித்தனர்)’இல்லை! ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே சரியான பதில். காரணம் அது உங்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை பரிசாகக் கொடுத்துள்ளது.”
கடந்த சனிக்கிழமையன்று அவர் தமது தகவலுடன் மலேசியாகினியை அணுகினார். தமது பெற்றோரிடமும் அவ்வாறு கூறப்பட்டதாகவும் அவர் சொன்னார். 1970களில் என் பெற்றோர்கள் இந்த நாட்டில் தொழில் நிபுணத்துவ பதவிகள் வழங்கப்பட்ட போது தெற்காசியாவிலிருந்து மலேசியாவுக்கு புலம் பெயர்ந்தனர்.
“அடுத்து நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. “அடுத்த முறை நான் வாக்களிக்கும் போது ஆளும் கட்சி மாறி விட்டால் என்ன செய்வது ?” என பெரும்பாலும் நான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கேள்வியை அவர்கள் ஒதுக்கி விட்டனர்… எனக்கு ஆத்திரமாக இருந்தது.”
“நிரந்தர வசிப்பிட உரிமை “பரிசு அல்ல”. நான் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்துள்ளேன். பிறப்புரிமையை நிர்ணயம் செய்வதற்கான ஆதாரம் இல்லாததால் ( jus soli ) நான் அந்நியராகப் பிறந்தேன்.”
அவர் பிறந்த போது அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமை கொடுக்கப்படவில்லை. காரணம் பத்து ஆண்டுகளுக்கு மேல் மலேசியாவில் வசித்திருந்த போதிலும் அவர் பிறந்த வேளையில் பெற்றோர்களுக்கு அந்தத் தகுதி கொடுக்கப்படவில்லை.
1990ம் ஆண்டுகளில் நிரந்தர வசிப்பிட உரிமைக்கான அவர்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
“(நிரந்தர வசிப்பிட தகுதிக்கான விண்ணப்ப நடைமுறைகள்) அந்த நடைமுறைகள் குழப்பமானவை. தற்காலிக விசாவில் உள்ளவர்களைக் காட்டிலும் குறைவான உரிமைகளே அவர்களுக்கு உள்ளன. எங்களை என்ன செய்வது என்பதே பலருக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.
இரண்டாவது முயற்சி
குடிநுழைவுத் துறையுடன் அண்மையில் நடத்தப்பட்ட பேட்டி குடியுரிமைக்கான அவர்களுடைய இரண்டாவது முயற்சியாகும்.
அவரது தந்தை முதல் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார். காரணம் அவர் தேவைப்படும் 150 சொற்களைக் காட்டிலும் 10 சொற்கள் குறைவாகக் கட்டுரையை எழுதி விட்டார்.
“நீங்கள் முறையீடு செய்ய முடியாது. ஆகவே நாங்கள் மீண்டும் எல்லா நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.” 2000த்தாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர்களுடைய விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.
அவருக்கு அப்போது 21 வயதுக்கும் குறைவாக இருந்ததால் தந்தையுடன் சேர்த்து அவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
“எஸ்பிஎம் தேர்வில் எனக்கு பாஹாசா மலேசியாவில் ‘ஏ’ கிடைத்தது கூட முக்கியமாகக் கருதப்படவில்லை,” என்றார் அவர். தேசிய பள்ளி முறையில் விண்ணப்பதாரர் தமது கல்வி கற்றார்.
“நாங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். எங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய அந்த முறைக்குள் உள்ள மக்களை என் தந்தை கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டன. நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். இது முடிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.”