மஇகா 13வது பொதுத் தேர்தலில்,அதற்கெனவுள்ள ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும் 19 சட்டமன்ற இடங்களிலும் மட்டுமே போட்டியிடும்.கூடுதல் இடங்களுக்குக் கோரிக்கை விடுக்காது.
“கூடுதல் இடங்கள் கேட்பதற்கு இது தருணமல்ல.முதலில் எங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும்”.வரும் தேர்தலில் மஇகா கூடுதல் இடங்களுக்குக் கோரிக்கை விடுக்குமா அல்லது சில இடங்களை விட்டுக்கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுமா என்று வினவியதற்கு மஇகா மேல்மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்.
மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமான இந்திய மலேசியர்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு வந்த மஇகா, 2008 தேர்தலில் கிட்டத்தட்ட துடைத்தெறியப்படும் நிலை ஏற்பட்டது.
அத்தேர்தலில் மஇகாவுக்கு இந்தியர்களிடமிருந்த 82விழுக்காடு ஆதரவு 47விழுக்காட்டுக்குச் சரிந்தது.எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்த மஇகா உருத்தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டது.
அப்போது சுழன்றடித்த அரசியல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்கள் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்(செகாமாட்),எம்.சரவணன்(தாப்பா),எஸ்.கே.தேவமணி(கேமரன் மலை) ஆகிய மூவர் மட்டுமே.
சுப்ரமணியம் மனிதவள அமைச்சரானர்.சரவணன் கூட்டரசு பிரதேச,நகர்புற நல்வாழ்வு துணை அமைச்சராகவும் தேவமணி பிரதமர்துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
நஜிப்பின் இனிப்புகள்
2010-இல் ஹுலு சிலாங்கூர் இடைத்தேர்தலில் மஇகா தகவல் தலைவர் பி.கமலநாதன் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றத்தில் அதன் எம்பிகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று கூடியது.
அத்தேர்தலில் கமலநாதன், 1,725வாக்குகள் பெரும்பான்மையில் முன்னாள் பிகேஆர் தலைவர் சைட் இப்ராகிமை வென்றார்.
சட்டமன்றங்களுக்காக 19இடங்களில் போட்டியிட்ட மஇகா ஏழில் மட்டுமே வென்றது.
இப்போது நஜிப், இந்தியர்களுக்கு வழங்கும் உதவிகளின் பயனாக இந்தியர்களின் ஆதரவு மஇகாவுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அக்கட்சி கூறுகிறது.
நஜிப் கொடுத்த இனிப்புகள், தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கு 2012 பட்ஜெட்டில் ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கம்-2009இலிருந்து இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரிம440 மில்லியனை எட்டியுள்ளது-இந்தியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கட்சி வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
மலேசியாவின் மக்கள்தொகையான 28 மில்லியனில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.9மில்லியன்.அதாவது ஏழு விழுக்காடு.செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று கருதப்படுகிறது.