பிரிக்பீல்ட்சில் போலீசார் காவல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்

பிரிக்பீல்ட்ஸ் போலீசார், எதிர்வரும் விழாக்காலத்தைக் கருத்தில் கொண்டும் குற்றம் பற்றிய அச்சத்தைக் குறைக்கவும் காவல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஒப்ஸ் தாவான் என்று பெயரிடப்பட்டுள்ள அப்போலீஸ் நடவடிக்கையை பங்சார் வில்லேஜில் இன்று பிற்பகல் 2.30-க்குத் தொடக்கிவைத்த  பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட், 90 போலீஸ் அதிகாரிகளுடன் பங்சார் பாரு வணிக வட்டாரத்தில் காவல் பணிகளில் ஈடுபட்டார்.

இந்நடவடிக்கை தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், ஸ்ரீஹர்த்தாமாஸ் ஆகியவற்றையும் உள்ளிட்டிருக்கும் என்று கூறிய வான் அப்துல் பாரி, புகார்கள் அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் போலீஸ் கூடுதல் கவனம் செலுத்தும் என்றார்.

கடந்த 48மணி நேரத்தில் தம் போலீஸ் மாவட்டத்தில் தெரு குற்றம் தொடர்பில் ஒரு புகார்கூட கிடைக்கப்பெறவில்லை என்றாரவர்.

இந்நடவடிக்கையின்கீழ் பிரிக்பீல்ஸ் போலீசாருடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகப் போலீசாரும் கலகத் தடுப்புப் போலீசாரும்கூட காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நான்கு நான்கு பேராக அவர்கள் காவல் சுற்றில் ஈடுபடுவார்கள். வெறுமனே சுற்றி வராமல் கடைகளுக்குப் பொருள் வாங்கும் வருவோரைச் சந்திப்பார்கள், உரையாடுவார்கள்.அதன்வழி தங்கள் இருப்பை மக்களுக்கு உணர்த்துவார்கள்.

பேரங்காடிகளின் கார் நிறுத்தங்களில் போலீஸ் கார்கள் ரோந்து வரும் என்றும் ஒசிபிடி தெரிவித்தார்.