நாடு திரும்பிவர விருப்பம் கொண்டிருக்கும் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி திங்கள்கிழமை கடைசி முயற்சியாக சிங்கப்பூரில் மலேசிய கடப்பிதழுக்காக மனுச் செய்துகொள்வார்.
அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ ஆகஸ்ட் 1-இல் திட்டப்படி மலேசியா திரும்பிவர அவர் உறுதியுடன் இருக்கிறார் என இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி. சம்புலிங்கம் கூறினார்.
பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள வேதமூர்த்தி(வலம்) ஜூலை 27-இல் லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் கடப்பிதழுக்கு விண்ணப்பித்துக் கொண்டார்.
அங்குள்ள துணைத்தூதர் வான் சைடி வான் அப்துல்லா, “வேதமூர்த்தி மலேசியா திரும்புவதை மலேசிய அரசாங்கம் ஆட்சேபிக்காது” என்று ஜூலை 24-இல் ஒரு கடிதம் எழுதியிருந்ததாக சம்புலிங்கம் கூறினார்.
பின்னர் வேதமூர்த்தி தூதரகத்துக்குச் சென்றபோது ,அவர் மலேசியக் கடப்பிதழ் கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
“புத்ரா ஜெயாவுடன் தொடர்புகொண்டு விசாரித்ததில் அவருடைய கடப்பிதழுக்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீசின்(ஐஜிபி)தனி அனுமதி தேவைப்படுவதால் அதற்காகக் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.
“அதனால் அவர்கள் கடப்பிதழ் கொடுக்க விரும்பினாலும்கூட அவர்களின் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றன”, என்று சம்புலிங்கம் கூறினார்.
வேதமூர்த்தியின் காலாவதியான கடப்பிதழை அவரிடம் திருப்பிக் கொடுத்த மலேசிய தூதரகம் அவருக்கு அவசரநிலை கடப்பிதழ் ஒன்றை வழங்க முன்வந்தது. ஆனால், அதை வைத்துக்கொண்டு மலேசியாவுக்கு ஒரு-வழிப் பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.வேதமூர்த்தி அதை ஏற்கவில்லை.
“அரசின் தயவில் திரும்பி வர வேதமூர்த்தியின் தன்மானம் இடம்கொடுக்கவில்லை. உரிமைபெற்ற குடிமகனாக அவர் மலேசியா திரும்பிவர விரும்புகிறார்”, என்றவர் சொன்னார்.
எனவேதான், அவர் நாளை சிங்கப்பூர் வந்து அடுத்த நாள் சிங்கப்பூரில் கடப்பிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்வார்.
“வேதமூர்த்தி நாடு திரும்ப அனுமதி அளிக்குமாறு ஐஜிபி-யை ஹிண்ட்ராப் கேட்டுக்கொள்கிறது. அவர் இங்கு வந்த பிறகு எந்தக் குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்துங்கள்”, என்று சம்புலிங்கம் கூறினார்.