சர்ச்சைக்குரிய மெர்டேகா சின்னத்தை அரசு அகற்றியது

மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 55-வது தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சின்னத்துக்குப் பதில், 1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதனை அறிவித்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் “தப்பெண்ணங்களைத் தடுக்க” அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார்.

“தப்பெண்ணத்தைத் தடுக்க 1மலேசியா சின்னத்தை மட்டுமே மெர்டேகா மற்றும் மலேசிய தினச் சின்னமாகப் பயன்படுத்துவோம்”, என்றாரவர்.

மெர்டேகா தினம் ஆகஸ்ட் 31-இலும் மலேசிய தினம் செப்டம்பர் 16-இலும் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சின்னம் “கற்பனைத்திறனற்ற, தரக்குறைவான படைப்பு” என்று மலேசிய வரைகலை சங்கத் தலைவர் ஜகாரி ஒங் நேற்று சாடியிருந்தார்.

கருப்பொருள் பாடலுக்கும் இணையத்தில் எதிர்ப்பு

இணையத் தளத்திலும் சின்னத்துக்கு எதிராக பரவலான எதிர்ப்பு கிளம்பியது. டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், உலகம் மலேசியாவைப் பார்த்து “சிரிக்கும்” என்றார்.

இணையத்தளத்தில் மாற்றுச் சின்னம் வரையும் போட்டிகளுக்கும்கூட ஏற்பாடு செய்தார்கள்.

நேற்றுவரை சின்னத்தைத் தற்காத்துப் பேசிய வந்த ரயிஸ் அதன்மீதான சர்ச்சைகளை “அரசியல் நோக்கங்கொண்டவை” என்று ஒதுக்கித்தள்ளினார்.

55வது மெர்டேகா தினத்தைக் கொண்டாடுவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகள் சீராகச் செல்லவில்லை. முதலில், கருப்பொருள் பாடலில் பிஎன் சுலோகம் ‘Janji ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) பயன்படுத்தப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

ரயிஸ் எழுதிய அப்பாடல் “அசிங்கமான பரப்புரை” எனச் சாடப்பட்டது.