கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகும் அம்னோ பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின் முடிவைக் கண்டு வியப்படையவில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“லாஜிம் அப்படிச் செய்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுகாறும் கட்சியின் நிலைபாட்டுக்கெதிராகத்தான் அவர் பேசி வந்திருக்கிறார்.
“அதனால் முடிவு வியப்பளிக்கவில்லை. அவரது முடிவை ஏற்கிறோம். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறோம்”, என்று நஜிப் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சரான லாஜிம், அம்னோ உச்சமன்றத்திலிருந்தும் பியுஃபோர்ட் அம்னோ தொகுதித் தலைவர், பியுஃபோர்ட் பிஎன் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆனால், துணை அமைச்சர் பதவியையும் சாதாரண உறுப்பினர் தகுதியையும் அவர் விட்டுவிடவில்லை. கட்சியிலிருந்து விலக்கப்பட்டால் மட்டுமே அவற்றைத் துறக்கப்போவதாக அவர் கூறினார்.
புதிய கட்சி ஒன்றில் சேரும் எண்ணமெல்லாம் கிடையாது என்று கூறிய லாஜிம், சாபா நலனுக்காக மாற்றரசுக் கட்சியுடன் சேர்ந்து பாடுபடப்போவதாகக் குறிப்பிட்டார்.