புக்கிட் கெப்போங் உரை தொடர்பில் மாட் சாபு மீது குற்றம் சாட்டப்படும்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்து ஆகஸ்ட் 21ம் தேதி பினாங்கில் ஆற்றிய உரைக்காக அவர் மீது நாளை காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

புக்கிட் கெப்போங் சம்பவம் பற்றிய அதிகாரத்துவ விளக்கங்கள் மீது அவர் தமது உரையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

தவறான தோற்றத்தை தரக் கூடிய வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றவியல் சட்டத்தின் 505வது பிரிவின் கீழ் மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என அவரது வழக்குரைஞரான ஹனிப்பா மைதின் கூறினார்.

மாட் சாபு நாளை காலை 9 மணிக்கு பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

தமது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்றும் அதிகாரிகள் தவறான நபர் மீது குற்றம் சாடுகின்றனர் என்றும் ஹனிப்பா சொன்னார்.

” அவர்கள் உத்துசான் மலேசியா மீது குற்றம் சாட்ட வேண்டும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பினாங்கில் உள்ள தாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21ம் தேதி ஆற்றிய உரைக்காக மாட் சாபுவைக் கண்டிக்கும் பல செய்திகளை ஆகஸ்ட் 27ம் தேதி உத்துசான் மலேசியா வெளியிட்டிருந்தது.

1950ம் ஆண்டு புக்கிட் செப்போங் போலீஸ் நிலையத்தை தாக்கிய கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை மாட் சாபு பாராட்டிப் பேசியதாக அந்தச் செய்திகள் குறிப்பிட்டன. அந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்களை வீரர்களைப் போல (ஹீரோக்கள்) நடத்தியதாகவும் உத்துசான் மேலும் குற்றம் சாட்டியது.

ஆனால் உத்துசான் தமது சொற்களை திரித்து வெளியிட்டுள்ளதாக மாட் சாபு கூறிக் கொண்டுள்ளார். அதற்காக அம்னோவுக்கு சொந்தமான அந்த ஏட்டின் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.