சீனமொழி சுயேட்சை உயர்நிலைப்பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி 3,000 க்கு மேற்பட்டோர் இன்று சிகாமட்டில் ஒரு பேரணியில் கலந்து கொண்டனர்.
சீன கல்வி ஆதரவு குழுவான டோங் ஜோங் மற்றும் இதர சீன அமைப்புகள் இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த நான்கு மாதங்களில் நடந்த இம்மாதிரியான கூட்டங்களில் இது மூன்றாவதாகும்.
கம்போங் அப்துல்லாவிலுள்ள ஒரு திடலில் நடத்தப்பட்ட இப்பேரணியில் பங்கேற்றவர்கள் தங்களுடைய போராட்டத்தின் அடையாளமாக சிவப்பு நிற உடை அணிந்திருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு நடைபெற்ற அப்பேரணியில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
முதலாவது, பத்து பகாட்டின் ஹுவா ரென் சுயேட்சை பள்ளியின் கிளை ஒன்றை சிகாமட்டில் அமைப்பதற்கு பங்கேற்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாவது, கல்வி இலாகா சீனப்பள்ளிகளின் மேலாளர் வாரியத்திற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதோடு அதற்கு கூடுதல் அதிகாரம் அனுமதிக்கப்பட வேண்டும்.
26 ஆண்டுகால போராட்டம்
முன்னதாக நடந்துள்ள இரு பேரணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை சிகாமட் பேரணியும் ஏற்படுத்தும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்பேரணிகளின் விளைவாக குவாந்தானில் ஒரு சுயேட்சை பள்ளிக்கு புத்துயிர் அளிக்க மேற்கொண்ட போராட்டம் வெற்றி கண்டுள்ளது.
மண்டரின் மொழியைப் போதனை மொழியாகக் கொண்ட செக் ஹாவ் சுயேட்சை பள்ளி சிகாமட்டில் இயங்கி வந்தது.
ஆனால், கல்விச் சட்டம் 1961 அமலாக்கம் செய்யப்பட்டதும் அப்பள்ளி ஒரு தேசிய மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டது. சுயேட்சை பள்ளியை மீண்டும் உருவாக்குவதற்கான போராட்டம் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இப்பேரணியில் பங்கேற்ற பலர், புதுத் திருமண தம்பதியினர் உட்பட, தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்த தாங்களாகவே தயாரித்த பதாகைகளை ஏந்தி நின்றனர்.
பாஸ் மற்றும் மசீச பிரதிநிதிகள்
திருமணப் பெண் தே பே பின், 22, தாம் கம்போங் அப்துல்லாவை சேர்ந்தவர் என்றும் எதிர்கால தலைமுறையினர் சிகாமட்டில் ஒரு சுயேட்சை பள்ளியில் பதிவு செய்துகொள்ள இயலும் என்று நம்புவதாக கூறினார்.
“இது நமது உரிமை”, என்று கூறிய அவர், தானும் தமது கணவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்கியது குறித்து விளக்கம் அளித்தார்.
பங்கேற்றவர்களில் இன்னொருவர் நோர்மலா சுலைமான். இவர் 2011 தெனாங் இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளராக போட்டியிட்டவர்.
அவர் பள்ளிக்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டார்.
முன்னதாக மசீசவின் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் இப்பேரணிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்த போதிலும், அங்கு ஒரு மசீச பிரதிநிதியும் காணப்பட்டார்.
“மசீசவுடன் இணைந்து செயல்படுங்கள்”
ஜெமெந்தா சட்டமன்ற உறுப்பினர் லீ ஹூன் டீ அவர் அங்கு வந்ததற்கு காரணம் அவர் சிகாமட் மசீச பிரிவின் தலைவர் என்ற முறையில் அதனைப் பிரதிநிதிப்பதாக கூறினார்.
கட்சி சிகாமட் சீன மக்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளது. அதனால்தான் அவர் பேரணியின் அதிகாரப்பூர்வமான டி- சட்டையை அணிந்திருப்பதாக அவர் கூறினார்.
“நமது இலக்குகள் ஒன்றானதால் டோங் ஜோங் மற்றும் இதர சீன அமைப்புகள் மசீசவுடன் இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன்”, என்றாரவர்.
அங்கு டிஎபி மற்றும் பிகேஆர் பிரதிநிதிகள் பதாதைகளை ஏந்தி நிற்பதைக் கண்ட லீ, அவ்விரு கட்சிகளும் இந்நிகழ்வை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, மசீச தலைவர் சுவா ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் டோங் ஜோங் இவ்வாறான பேரணிகளை நடத்தி மசீசவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.
இக்குற்றச்சாட்டை மறுத்த டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான், இப்போராட்டம் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான எதிர்வினை எதுவுமே கிடையாது என்று கூறினார்.