மலாய் உரிமைகளுக்கு அழுத்தம் கொடுத்துவரும் அமைப்பான பெர்காசா, இவ்வாண்டு மெர்டேக்கா கொண்டாட்டத்துக்கான கருப்பொருளான ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) சுலோகத்தைத் தற்காத்துள்ளதுடன் அது உலகம் தழுவிய சுலோகம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
“வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உலகளாவிய பண்பு அல்லவென்று நினைக்கிறீர்களா?…’Janji Ditepati’ என்பது உலகளவில் மதிக்கப்படும் ஒரு பண்பு”, என்று பெர்காசா உச்சமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி நோர்டின் கூறினார்.அவர், நேற்றிரவு கோலாலம்பூரில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அரசாங்கம் ‘நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’ என்று கூறுகிறது, அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை…..வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள்தான் அச்சுலோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்”.
அதில் நடுநிலை இல்லை என்றும் பிஎன் அதைத் தேர்தல் பரப்புரையாகப் பயன்படுத்துகிறது என்றும் குறைகூறப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.
மெர்டேகா நாளுக்கு ஒரு சுலோகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் தனியுரிமை.அதைப் பிரச்னையாக்கக்கூடாது என்றாரவர்.