வேதமூர்த்தி நாடு திரும்ப கடப்பிதழ் கிடைத்தது

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கடப்பிதழ் பெற மேற்கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றார்.புதன்கிழமை அவர் நாடு திரும்புகிறார்.

2008-இல் ரத்துச்செய்த கடப்பிதழைத் திருப்பிக் கொடுத்திருப்பது இண்ட்ராப் போராட்டம் நியாயமானதுதான் என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.

கடப்பிதழ் கிடைத்ததும் மலேசியாகினியிடம் பேசிய வேதமூர்த்தி,“மலேசியன் என்று கூறிக்கொள்வதிலும் இந்தியர்களுக்கு மலேசிய அரசாங்கம் இழைத்த பெரும் அநீதியை நிரூபிக்க இண்ட்ராப் போராடுகிறது என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்”, என்றார்.

“கடப்பிதழ் வழங்கப்பட்டது நாங்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதுதான் என்பதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாகும்”.

2007 பிற்பகுதியில் இண்ட்ராப்மீது நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் நிலவிய வேளையில் வேதமூர்த்தி நாட்டைவிட்டு வெளியேறினார்.அப்போதிலிருந்து நாடுகடந்தே வாழ்ந்து வந்தார்.

இண்ட்ராப் தலைவர்கள் ஐவர், வேதமூர்த்தியின் சகோதரர் உதயக்குமார் உள்பட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.

வேதமூர்த்தி பிரிட்டனைத் தளமாகக் கொண்டு அங்கிருந்து இண்ட்ராப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.அவரது கடப்பிதழ் 2008-இல் ரத்து செய்யப்பட்டது.
 ‘இப்போது ‘முழு மலேசியன்’

மைகார்ட், பிறப்புச்சான்றிதழ் ஆகியவற்றைக் காண்பிக்கவில்லை ஆனாலும் மலேசிய தூதரகம் தமக்குக் கடப்பிதழ் வழங்கியது என்று வேதமூர்த்தி கூறினார்.

“என் அடையாள அட்டை (போலீஸ்) சிறப்புப் பிரிவிடம் இருப்பதாகச் சொன்னேன்.மேலதிகாரிகளுடன் கலந்து பேசினார்கள்.பிறகு கடப்பிதழ் வழங்கினார்கள்.

“இப்போது நான் ஒரு முழுமையான மலேசியன்.ஒரு குடிமகனுக்குரிய கெளரவம் திரும்பக் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்”.

வேதமூர்த்தி ஜோகூர் வழியாக நாடு திரும்புகிறார்.ஜோகூரில் ஓர் ஆலையத்தில் வழிபாடு செய்த பின்னர் சிரம்பான் சென்று குடும்பத்தாருடன் சேர்ந்துகொள்வார்.

இண்ட்ராப் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளதையும் அவர் மறுக்கவில்லை.

“அனுமதித்தால் மலேசியாவுக்குள் செல்வேன்.அதேவேளை கைதுசெய்யும் ஆணை வைத்திருந்தார்களானால் கைது செய்யப்படுவேன்”, என்றாரவர்.