பாஸ்: மெர்தேக்கா சின்னம் முற்றாக கைவிடப்பட வேண்டும்

இவ்வாண்டுக்கான மெர்தேக்கா சின்னம் மிகவும் ‘பயங்கரமானது’, ‘பயனற்றது’ என பாஸ் இளைஞர் பிரிவு கூறியுள்ளது. எந்த ஒரு ஊடகத்திலும் கூட கலை அம்சம் கொண்டதாக அது காட்டப்படக் கூடாது என அது கருதுகிறது.

“அந்தச் சின்னம் பிரச்சார ஒவியமாக இருந்தாலும் அது அதிகாரத்துவச் சின்னம் அல்ல என தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் குறிப்பிட்டுள்ளார். அது மிகவும் பயங்கரமானது. கொஞ்சம் கூட கலை அம்சம் இல்லாதது..”

“மெர்தேக்கா தினக் கொண்ட்டாட்டங்கள் தொடர்பில் எந்த ஊடகத்திலும் அது வெளியிடப்படக் கூடாது,” என பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரிட்துவான் முகமட் நோர் விடுத்த அறிக்கை கூறியது.

“மெர்தேக்கா தினச் சின்னத்தை முடிவு செய்வதில் அமைச்சு அலட்சியமாகவும் மெத்தனமாகவும் நடந்து கொண்டதாக நாங்கள் கருதுகிறோம்,” என்றார் அவர்.

ஆளும் கட்சி தொடர்ந்து தவறுகளைச் செய்து வருவதால் இவ்வாண்டுக்கான மெர்தேக்கா கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு வருகின்றன. மெர்தேக்கா தினக் கொண்ட்டாங்களுக்கான சின்னம் கடைசியாக சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த சின்னம் ‘மோசமானதாகவும்”, கேலிக்குரியதாகவும்’ இருப்பதாக வருணிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கொண்டாட்டங்களுக்கான கருப் பொருள் பிஎன் பிரச்சாரமாக உள்ளது என இணைய குடி மக்கள் புகார் செய்துள்ளனர். ராயிஸ் புனைந்துள்ள மெர்தேக்கா பாடலையும் மக்கள் குறை கூறியுள்ளனர்.

பொது மக்களுடைய ஆட்சேபத்தைத் தொடர்ந்து சின்னம் கைவிடப்பட்டு அதற்குப் பதில் ஒரே மலேசியா சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ராயிஸ் நேற்று அறிவித்தார்.

என்றாலும் சர்ச்சைக்குரிய வரைபடம் “கொண்டாட்டங்களுக்கு ஆதரவான ஒவியமாக” தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

அதே வேளையில்   ‘Janji ditepati’ என்ற பிஎன் பிரச்சார சுலோகமும் தொடர்ந்து வைத்திருக்கப்படும்.

“பிரதமர் நஜிப்  அம்னோவுக்கு மட்டும் தானா ?”

நடப்புக் கருப் பொருள் கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என வலியுறுத்திய ரிட்துவான் அது பிஎன் அரசியல் பிரச்சாரம் என்றார்.

“அது வாக்காளர்களிடம் பயன்படுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு அல்ல.” 

ஆளும் கட்சி மட்டுமே வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்ற தோற்றத்தை அளித்து அதற்கு வாக்களிக்குமாறு பொது மக்களை அரசாங்கம் கட்டாயப்படுத்துவதற்கு ஒப்பாகும்,” என்றார் ரிட்துவான்.

பிரதமர் நஜிப் ரசாக் தொழில் ரீதியாகச் செயல்பட வேண்டும் என்றும் கட்சி அரசியலை தேசிய தினக் கொண்டாட்டங்களுக்குள் கொண்டு வரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அவர் நாடு முழுமைக்கும் அல்லாமல் அம்னோ பிஎன் உறுப்பினர்களுக்காக மட்டும் பிரதமராக இருக்க விரும்புகிறாரா ?”

“அவர் எல்லா குடி மக்களுக்கும் பிரதமராக இருக்க விரும்பினால் அவர் சின்னத்தையும் கருப்பொருளையும் மாற்றி மக்களுடைய உணர்வுகளைப் பிரதிநிதிக்கும் வகையில் அவற்றை அமைக்க வேண்டும்.”